நாடாளுமன்றத்தில் கூச்சல், குழப்பம் என்றால் அது தினசரி செய்தி; ஆளுங்கட்சி எதைச் செய்தாலும், அதில் தப்பு கண்டுபிடித்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யவேண்டியிருக்கிறதே! மிக அரிதாக சில தருணங்களில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற வித்தியாசங்களை மறந்து, எல்லா கட்சி எம்.பி.க்களும் எழுந்து ஒரே குரலில் கருத்து தெரிவிப்பார்கள். காந்தி கண்ட ஜனநாயகக் கனவு முழுமையடைந்துவிட்டதோ என சிலிர்க்கவைக்கும் அப்படிப்பட்ட தருணம், சில நாட்களுக்கு முன்பு நிகழ்ந்தது. அரிசி, பருப்பு வகைகளின் விலை உயர்வு பற்றியோ, ஏமாற்றும் பருவமழையால வரப்போகும் உணவுப்பஞ்சம் பற்றியோ நமது மக்கள் பிரதிநிதிகள் பேசிவிட்டதாக நினைத்து சிலிர்ப்படைந்துவிடாதீர்கள்... வி.ஐ.பி.களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு வளையத்தைக் குறைக்க மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மேற்கொண்ட முயற்சிகளை முறியடிக்கவே ஒருமித்த குரலில் அவர்கள் பேசினார்கள். மாயாவதியின் கட்சியினரும் முலாயம்சிங் யாதவ் கட்சியினரும் ஒரே குரலில் பேசியது உத்திரப் பிரதேசத்தை திக்பிரமையில் ஆழ்த்திவிட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக தன் சொந்தக் கட்சியிலேயே எதிர்ப்பு எழுந்ததால், வேறு வழியின்றி சிதம்பரம் பின்வாங்க வேண்டியதாயிற்று!இத்தனைக்கு சிதம்பரம் ஒரேயடியாக பாதுகாப்பை குறைக்கும் அதிரடி முடிவை எடுக்கவில்லை. நியாயமாகத் தேவை இருக்கும் தலைவர்களுக்கு மட்டுமே பாதுகாப்பு தருவது; அதிலும் எந்த அளவுக்கு அச்சுறுத்தல் இருக்கிறதோ, அதைப் பொறுத்து தருவது... என கொள்கை முடிவு எடுத்தார். கடந்த 2006ம் ஆண்டு ஜூலையில் மும்பை புறநகர் ரயில்களில் குண்டுகளை வெடிக்கச்செய்து ஏராளமான அப்பாவிகளை தீவிரவாதிகள் கொன்று குவித்தனர். அப்போது மகாராஷ்டிர உள்துறை அமைச்சராக இருந்த ஆர்.ஆர்.பாட்டீல், சம்பவ இடங்களைப் பார்வையிட்டபிறகு உணர்ச்சிவசப்பட்டு சொன்ன வார்த்தைகள் இந்தியா முழுக்க பிரபலம்... ‘மும்பை போலீசார் வி.ஐ.பி.களை பாதுகாப்பதை விட்டுவிட்டு மக்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட வேண்டும்!’ ஆனால் பாட்டீல் எடுத்த முயற்சிகளை காங்கிரஸ் கட்சியினரே முறியடித்துவிட்டார்கள். கடந்த ஆண்டு கடல்வழியாக வந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையை முற்றுகையிட்டபோது இதன் விளைவு தெரிந்தது. எத்தனையோ அனுபவங்கள் இருந்தும், எந்தவகையிலும் ஒரு தீவிரவாத தாக்குதலை எதிர்கொள்ளமுடியாமல் மும்பை போலீஸ் திணறி, பல திறமையான அதிகாரிகளை இழந்தது. கமாண்டோ படை வந்தபிறகும் பல மணி நேரங்கள் தீவிரவாதிகள் முற்றுகை நீடித்தது. இப்படி தீவிரவாத தாக்குதல்கள், விமானக் கடத்தல் முயற்சிகளை முறியடிக்க உருவாக்கப்பட்ட கமாண்டோ படை எனவும் கறுப்புப் பூனைப்படை எனவும் அழைக்கப்படும் என்.எஸ்.ஜி. படையினர்தான் நமது தலைவர்களை பாதுகாக்கும் பணியில் பெருமளவு ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்பது இன்னொரு அவலம்!இந்தியா முழுக்க இப்படி பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் பிரபலங்களின் எண்ணிக்கை சுமார் 13 ஆயிரத்துக்கும் மேல்! மத்திய உள்துறை அமைச்சகம் தரும் கணக்கு இது. பிரதமர்கள், ஜனாதிபதிகள், மத்திய, மாநில அமைச்சர்கள், அதிகாரிகள், நீதிபதிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் இந்த எல்லா பிரிவுகளிலும் இருக்கும் சில முன்னாள்கள் என நீள்கிறது இந்தப் பட்டியல். இவர்களைப் பாதுகாக்கும் பணியில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கும் மேல் இந்தப் பாதுகாப்பு பணிகளுக்காக செலவிடப்படுவதாக ஒரு கணக்கு சொல்கிறது. மக்களின் வரிப்பணத்தில் இப்படி ஒரு பாதுகாப்பை அனுபவிக்க, இவர்களில் எத்தனை பேர் தகுதியானவர்கள்? சொல்லப்போனால், இந்த எல்லா வி.ஐ.பி.களுக்கும் மிரட்டல் விடுக்கும் காஷ்மீர் தீவிரவாதிகளில் ஆரம்பித்து, உல்பா தீவிரவாதிகள், உள்ளூர் தாதாக்கள் வரையுள்ள பலரையும் ஒடுக்குவதற்குக்கூட இவ்வளவு பெரிய படை பலத்தை நம் தேசம் பயன்படுத்தியிருக்காது.ப.சிதம்பரமே கூட, ஒரேயடியாக இந்தப் பாதுகாப்பை வாபஸ் பெற்று, எல்லா தலைவர்களையும் நிர்க்கதியாக ரோட்டில் விட நினைக்கவில்லை. நியாயமாக யார் யாருக்கு என்ன பாதுகாப்பு தேவையோ, அதை மட்டுமே கொடுக்க விரும்பினார். ஆனால் பல தலைவர்கள் இதையும் ஒரு அரசியல் அந்தஸ்தாக நினைப்பதுதான் பிரச்னை!பிரதமராக இருந்தபோது இந்திராவையும், பதவியில் இல்லாதபோது ராஜீவையும் தீவிரவாதத் தாக்குதலில் இழந்தபிறகே, தலைவர்கள் பாதுகாப்பு விஷயத்தில் இந்தியாவில் விழிப்புணர்வு வந்தது. பிரதமரின் பாதுகாப்புக்காக எஸ்.பி.ஜி. எனப்படும் பிரத்யேக பாதுகாப்புப் படை உருவானது. பதவியிலிருக்கும் பிரதமருக்கும், அவரது குடும்பத்துக்கும் பாதுகாப்பு கொடுக்கும் இந்தப்படை... முன்னாள் பிரதமர்களின் குடும்பத்துக்கும், பதவியிலிருந்து விலகியபிறகு 10 ஆண்டுகள் பாதுகாப்பு வழங்கும்; அவர்களுக்கு இருக்கும் அச்சுறுத்தலைப் பொறுத்து இந்தப் பாதுகாப்பு நீடிக்கப்படும். இஸட் பிளஸ் எனப்படும் அதிமுக்கிய பாதுகாப்பு வளையத்துக்குள் வரும் வி.ஐ.பி.களை பாதுகாப்பதும் இவர்களது கூடுதல் பணியானது. கறுப்புப் பூனைப்படை எனப்படும் என்.எஸ்.ஜி. படையினர் இதற்கு அடுத்து வருவார்கள். தீவிரவாத நடவடிக்கைகளை முறியடிப்பதற்காக உருவான இந்த அமைப்பும் வி.ஐ.பி.கள் பாதுகாப்புப்படையாக ஆகிவிட்டது. இதுதவிர இந்தோ - திபெத்தியன் எல்லைப் பாதுகாப்பு போலீஸ், மத்திய ரிசர்வ் போலீஸ், டெல்லி போலீஸ் மற்றும் பல்வேறு மாநிலங்களின் போலீசார் இந்த பாதுகாப்பு பணிகளை சிரமேற்கொண்டு செய்கின்றனர். இப்படி பல்வேறு படைகளில் இருப்பவர்களை இந்தப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவது தவறு என்பதை உணர்ந்த மத்திய உள்துறை, தலைவர்கள் பாதுகாப்புக்காக தனி படையை உருவாக்க கடந்த 2006ம் ஆண்டு முயற்சி மேற்கொண்டது. முக்கியமான வி.ஐ.பி.களுக்கு மட்டும் அரசு செலவில் பாதுகாப்பு வழங்குவது என்றும், மற்றவர்களுக்கு பாதுகாப்பு வழங்க செலவிடப்படும் தொகையை அவர்களிடமிருந்து வசூலிப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது. ஆனால் எல்லா அரசியல்கட்சிகளும் ஒட்டுமொத்தமாக இணைந்து, இந்தத் திட்டத்தைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டன. இஸட் பிளஸ் எனப்படும் பாதுகாப்பு வளையம்தான், பிரதமருக்கு வழங்குவதற்கு அடுத்தபடியாக உயர்மட்ட பாதுகாப்பு. எஸ்.பி.ஜி. மற்றும் என்.எஸ்.ஜி. படைகளைச் சேர்ந்த 36 பாதுகாவலர்கள் எப்போதும் பாதுகாப்பு வளையம் அமைத்து சூழ்ந்திருப்பார்கள். தலைவர்களின் இருப்பிடத்தைப் பொறுத்து இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும். முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி, பல்வேறு மாநில முதல்வர்களான நரேந்திர மோடி, புத்ததேவ் பட்டாச்சார்யா, ஒமர் அப்துல்லா, அசோக் சவான், மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, மம்தா பானர்ஜி, சரத் பவார், முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, சந்திரபாபு நாயுடு, கட்சித் தலைவர்களான பால் தாக்கரே, முலாயம்சிங் யாதவ் என 31 பிரமுகர்கள் இந்த அதி பாதுகாப்பு வளையத்துக்குள் வருபவர்கள். இஸட் பிளஸ் பாதுகாப்புக்கு அடுத்தபடியாக இஸட் பிரிவு வருகிறது; இதில் குறைந்தபட்சம் 22 செக்யூரிட்டிகள் வருவார்கள். அடுத்ததாக ஒய் பிரிவு; இதில் 11 பாதுகாவலர்கள் குறைந்தபட்சம் இருப்பார்கள். அடுத்தது எக்ஸ் பிரிவு; இதில் குறைந்தபட்சம் இரண்டு பாதுகாவலர்கள் உண்டு. இந்த வகைகள் தவிர மாநில அரசுகள் அவர்கள் இஷ்டத்துக்கு யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கும் பாதுகாப்புக்கு வரம்புகள் கிடையாது.டெல்லி போலீஸ் படையில் மொத்தம் இருப்பது 60 ஆயிரம் பேர்; இவர்களில் நான்கில் ஒரு பங்கினர் அதாவது 15 ஆயிரம் பேர் நிரந்தரமாக வி.ஐ.பி.களைப் பாதுகாக்கும் பணியில் இருக்கின்றனர். விளைவு... தேசத்தின் தலைநகராக இருப்பது போலவே குற்றங்களின் தலைநகராகவும் இருக்கிறது டெல்லி. குழந்தைகள் கடத்தல், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் போன்ற கொடூரமான குற்றங்கள் அதிகம் நடப்பது அங்குதான்! மும்பையின் 42 ஆயிரம் போலீஸாரில் கிட்டத்தட்ட 13 ஆயிரம் பேர் வி.ஐ.பி.களை பாதுகாக்கும் பணிகளையே செய்கின்றனர். அரசியல் தலைவர்கள் அதிகம் இருக்கும் பீகார் மாநிலத்தில் இந்த எண்ணிக்கை 10 ஆயிரமாக இருக்கிறது. யார் யாருக்கு இதெல்லாம் அவசியம்..? எந்த அடிப்படையில் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது? ரயில்வே அமைச்சர் பதவியைக் கேட்டு வாங்கிய லாலு, அதோடு சேர்த்து போனஸாக வாங்கியது இஸட் பிளஸ் பாதுகாப்பு. இதைப் பார்த்து பாஸ்வானும் அடம்பிடித்து வாங்கினார். சொந்த மாநிலமான பீகாருக்குப் போகும்போது, மாநில முதல்வர் நிதீஷ்குமாரைவிட பந்தாவாக வலம்வர வேண்டும் என்பது மட்டுமே இதற்குக் காரணமே தவிர, இவர்களுக்கு யாராலும் பாதுகாப்பு அச்சுறுத்தல் வந்தது கிடையாது. தன் மனைவி ரப்ரி தேவி, மச்சான்கள் என எல்லோருக்கும் பாதுகாப்பு வளையத்தை ஒட்டுமொத்த பேக்கேஜாக வாங்கினார் லாலு. மன்மோகனின் கடந்த பதவிக்காலத்தில் திடீரென இடதுசாரிகள் முறைத்துக்கொண்டு ஆதரவை வாபஸ் வாங்கியபோது, ஆபத்பாந்தவனாக ஆதரவுக்கரம் நீட்டினார் முலாயம். இதற்குப் பிரதிபலனாக அவருக்கும் அமர்சிங்குக்கும் இஸட் பிளஸ் பாதுகாப்பை அளித்தது மத்திய அரசு. யார் யாருக்கு அச்சுறுத்தல்கள் அதிகம் என மத்திய உள்துறை அமைச்சகம் அடிக்கடி நிலைமையை ஆராய்ந்து பட்டியல் தயாரிக்கும்; அந்தப் பட்டியலைப் பார்த்து முடிவெடுக்கவேண்டிய அதிகாரம் உள்துறை அமைச்சரின் கையில் இருக்கிறது. இதனாலேயே தலைவர்கள் பாதுகாப்பு என்பது அரசியல் பாரபட்சங்களின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவானது! எப்போதோ அரசியல் லைம்லைட்டிலிருந்து மறைந்துபோன நட்வர்சிங், சிவராஜ் பாட்டீல், சுரேஷ் பச்சௌரி என பல பிரபலங்கள் இன்னமும் பாதுகாப்பு வளையத்தோடு மிடுக்கு காட்டுகிறார்கள். தீவிரவாதிகள் என்றில்லை... காதருகே பறக்கும் கொசு கூட இவர்களுக்கு அச்சுறுத்தல் தருவதில்லை என்பதுதான் நிஜம்!ஆனால் பாதுகாப்பைக் குறைக்க அரசு முயற்சி மேற்கொண்டபோது, ‘எங்களுக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு காங்கிரஸ் அரசுதான் பொறுப்பு!’ என முலாயமும் லாலுவும் ஆவேசமாக முழங்கினார்கள். மாயாவதியின் கட்சியினரும் இதையே செய்தார்கள். எதற்கு வம்பு என்று அரசு பின்வாங்குகிறது. ஜெயலலிதா வசிக்கும் போயஸ்கார்டனின் யாராவது மனநிலை தவறியவர் நடமாடினால்கூட, அச்சுறுத்தல் என்று கூப்பாடு கேட்கும். இரண்டு டி.எஸ்.பி.கள் கொண்ட தனது பாதுகாப்பு பணிக்கு எஸ்.பி. அந்தஸ்தில் ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும் என நீண்டநாட்களாக கோரிக்கை விடுத்துவருகிறார் ஜெயலலிதா.இந்தப் பாதுகாப்பு அதிகாரிகளை பலரும் எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பது இன்னொரு கூத்து. கடைக்குப் போய் காய்கறி வாங்கி வரவும், குழந்தைகளை ஸ்கூலில் விட்டு கூட்டி வரவும், தலைவர்களின் வாரிசுகள் டிஸ்கொதே கிளப்களுக்குப் போனால் வாசலில் காத்திருந்து தாங்கிப்பிடித்து கூட்டி வரவும் அரசு வாகனங்களில் இவர்கள் பரபரப்பாக பயணிக்கிறார்கள். சிலர் துணி துவைப்பது, காய்கறிகளை அரிந்துகொடுத்து சமையலில் ஒத்தாசையாக இருப்பது போன்ற ‘அரிய’ பணிகளையும் செய்கிறார்கள். இன்னும் சிலரின் வேலைகள் பயங்கரமானவை... பீகாரைச் சேர்ந்த முன்னாள் ராஷ்டிரிய ஜனதா தள எம்.பி. விஜயகிருஷ்ணாவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த ஒருவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார். விஜயகிருஷ்ணாவின் மகன் செய்த ஒரு அரசியல் கொலைக்கு இந்த பாதுகாப்பு அதிகாரியும் உடந்தை. இதே லாலு கட்சியின் எம்.எல்.ஏ. ஒருவருக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர், மக்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதற்காகக் கைது செய்யப்பட்டிருக்கிறார். தலைவர்களோடு எப்போதும் இருக்கவேண்டிய சூழலுக்கு ஆளாகும் இந்த பாதுகாப்பு அதிகாரிகள், தங்களுக்கு யார் உயர் அதிகாரி என்பதை எல்லாம் மறந்து, இந்தத் தலைவர்களின் கட்டளைகளுக்கு அடிபணிகிற ஏவலாளாக மாறிவிடுகிறார்கள். இப்படி ஒவ்வொரு தலைவரும் சுயேச்சையாக போலீஸ் ஸ்டேஷன்களையே நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும்கூட தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கிறது. ஆனாலும் அங்கு அதிபர், துணை அதிபர், பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி போன்ற அரசியல் சாசன தலைமைப் பதவிகளை வகிப்பவர்கள்தவிர மற்றவர்களுக்கு அரசு செலவில் பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை. வேறு யாராவது பாதுகாப்பு பெற விரும்பினால், அதற்கான செலவை அரசுக்குத் தந்துவிட வேண்டும். இந்த முன்மாதிரியை வைத்து மகாராஷ்டிரா அரசும் சமீபத்தில் ஒரு திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. அங்கு பொதுமக்களில் யாராவது தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதினால், உரிய ஆதாரங்களுடன் புகார் தந்து, போலீஸ் பாதுகாப்பைப் பெறலாம். ஒரு கான்ஸ்டபிளுக்கு ஒரு நாளைக்கு 350 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும். இந்தக் கணக்கில் பார்த்தால், நம் தலைவர்கள் அரசுக்கு எவ்வளவு செலுத்த வேண்டி இருக்கும்? சொல்லப்போனால், பாதுகாப்பு கெடுபிடிகளோடு வளையவரும் இவர்களால்தான் சாதாரண மக்கள் சாலைகளிலும் இதர இடங்களிலும் மிகப்பெரிய அச்சுறுத்தலை சந்திக்கிறார்கள்.நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டும் உள்துறை அமைச்சர் என்கிறமுறையில் ப.சிதம்பரம் இயல்பாகவே இஸட் பிளஸ் பாதுகாப்பைக் கேட்டு வாங்கலாம். ஆனால், ‘எனக்கு அந்த அளவுக்கு அச்சுறுத்தல் இல்லை; ஒய் பிரிவு பாதுகாப்பே போதுமானது’ என்று சொல்லிவிட்டார் அவர்.சிதம்பரத்தைப் போலவே சுயபரிசோதனை செய்துகொள்ள நம் தலைவர்கள் தயாராக இருக்கிறார்களா?
tha
tha