Wednesday, November 25, 2009

பேச்சுதிறமை

பேசுவது நாக்கின் வேலை; கேட்பது காதின் வேலை. பேசுவது வெளிப்படுத்துவது; கேட்பது உள்வாங்குவது.
வியாபார மொழியில் சொல்வ தென்றால் பேசுவது விற்று முதல்; கேட்பது கொள்முதல்.
விற்றால்தான் லாபம் கிடைக்கும்; வாங்கினால்தான் விற்பதற்கு சரக்கு இருக்கும்.
விற்பது நல்லதா? வாங்குவது நல்லதா? என்று கேட்டால், விற்க வேண்டிய இடத்தில் விற்பதும், வாங்க வேண்டிய இடத்தில் வாங்குவதும் நம் பொறுப்பு.
‘நாநலம் என்னும் நலனுடைமை’ என்பார் திருவள்ளுவர். நாவன்மையை நானிலம் போற்றும். நலனுடைமை என்று கூறுவதன் பொருள், நாநலம் ஒரு நல்ல உடைமை. அதாவது, நல்ல சொத்து. ஆகவே, கவனமாகக் காப்பாற்ற வேண்டும்.
ஒரு பட்டிமன்றத்தில் பேசச் சென்றிருந்தோம். அந்த மன்றத்தின் செயலாளர் வரவேற்புரையாற்றினார். பட்டிமன்றப் பொருள் பற்றி விஸ்தாரமாகப் பேசினார். பட்டிமன்றப் பேச்சாளர்கள் யாவரும் திகைத்துப்போய் அமர்ந்திருந்தனர். இடையிடையே ‘இதையெல்லாம் நான் பேசக்கூடாது’ என்று வேறு சொல்லிக் கொண்டே பேசுகிறார். இதைப்பற்றியெல்லாம் பட்டிமன்றப் பேச்சாளர்கள் பேசவேண்டும் என்று கட்டளை வேறு போடுகிறார். சிலவற்றைப் பட்டியலிடுகிறார்.
மேடைப் பேச்சாளர்கள் எதைப் பேச வேண்டும் என்று தொகுப்பதைவிட, எதைப் பேசக் கூடாது என்பதை வகுத்துக்கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியம். அப்போதுதான் பேச்சுக்கு வரவேற்பு கிடைக்கும்.
வரவேற்புரை சொல்லு பவர் வந்தவர்களை வரவேற்பதோடு
நிறுத்திக் கொள்ளுவதுதான் முறையாகும். அதற்குமேல் பேசி னால், அது அதிகப்பிரசங்கித் தனமே தவிர வேறல்ல.
நன்றியுரை ஆற்ற வந்தவர், நன்றி சொல்லி முடிப்பதில் கவனம் செலுத்த வேண்டுமே அன்றி, சொற்பொழிவாற்றிய வர்களின் பேச்சை திறனாய்வு செய்தும், பேசியவர் மனம் நோகவும் பேசுவது முறையா காது. நன்றியுரை என்பது, பேசிய வரை மனங்குளிரச் செய்வதாக அமைய வேண்டும்.
துணைப் பேச்சாளர் சுருக்க மாகப் பேசுவதே நல்லது. முக்கிய மான பேச்சாளரின் நேரத்தையும் துணைப் பேச்சாளர் எடுத்துக் கொண்டு பேசிவிட்டால், முக்கியப் பேச்சாளர் யார் நேரத்தை எடுப்பது?
குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிவு பெறாத கூட்டம், கேட்க வந்தவர்களுக்கு அலுப்பையும் சலிப்பையும் உண்டாக்கும். ‘இனி, இவர்கள் நடத்தும் கூட்டத்துக்கு வருவதில்லை’ என்ற முடிவோடு வீடு செல்வார்கள். இது தேவை தானா?
ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டு பேசுபவர்கள், அந்தத் தலைப்பில் மட்டும் செய்தி களைத் தரவேண்டும். தலைப்பை விடுத்து வேறு விஷயங்களைப் பேசினால், மக்கள் வெறுப் படைவார்கள்.
கூட்டத்துக்கு ஏற்பாடு செய் பவர்களும் தலைப்புக்கேற்ற சொற்பொழிவாளர்களை ஏற்பாடு செய்ய வேண்டும். நகைச் சுவை மன்றத்தில் பேசுமாறு நகைச்சுவை உணர்வு இல்லாத வரை அழைத்தால், அவர் என்ன செய்வார்? பாவம். ஆழ்ந்த கருத்தை அழுத்தந்திருத்தமாகப் பேசுவார். நகைச்சுவையை எதிர் பார்த்து வந்தவர்கள் ஏமாந்து போவார்கள். அவரை அழைத்தது தவறு என்றால், பேசவந்தது இவர் செய்யும் மிகப்பெருந்தவறு.
கூட்டம் கேட்க வந்த சுவைஞர் களின் உள்ளத்தைப் புண்படுத் தாதவாறு பேச வேண்டும். அது தான் மேடை நாகரிகம்.
ஒருமுறை பெர்னாட்ஷா லண்டனில் பேசும் போது, வந்திருந்தவர்கள் சுவைத்துக் கேட்காததை உணர்ந்து, ‘கேட்க வந்தவர்களில் பாதிப்பேர் முட்டாள் கள்’ என்றார். கூட்டம் ஆவேசத்துடன் அவர் பேச்சை எதிர்த்து மன்னிப்புக் கேட்குமாறு முழக்கமிட்டது.
பெர்னாட்ஷாவோ அமைதி யாக, ‘வந்திருப்போரில் பாதிப் பேர் அறிவாளிகள்’ என்று கூறி னார். கூட்டம் அமைதியடைந்து ‘அப்படிச் சொல்லுங்கள்’ என்றது. முதலில் சொன்ன தற்கும் மறுபடி சொன்னதற்கும் வித்தி யாசமில்லை. எனினும் பேச்சு முறையில் நயம் இருந்ததால் தப்பித்தார்.
மேடையேறிப் பேசுவது தான் பேச்சு என்பதில்லை. மற்றவர் களுடன் உரையாடுவதும் ஒரு கலையே ஆகும்.
உரையாடுவதில்தான் எத்தனை வகைகள்? நம் மன நிலை தெரியாமல் பேசிக் கொண்டே இருப்பவர்கள் எத்தனை பேர்? இன்று நல்ல ஓய்வு; யாராவது வந்தால் பேசிக் கொண்டிருக்கலாம் என்று நினைத்து தயாராயிருக்கும் போது ஓரிரு வார்த்தைகளோடு பேச்சை முடித்துக்கொண்டு ‘இதோ வருகிறேன்’ என்று போய் விடுவோர் எத்தனை பேர்?
உடல்நிலை சரியில்லாமல் எப்போதோ இருந்ததை விசாரிக்க வந்ததாகக் கூறிக்கொண்டு நீண்ட நேரம் உரையாடிக்கொண்டு இருந்துவிட்டு, ‘அப்படியே ஒரு 50 ரூபாய் இருந்தால் வாங்கிட்டு போகலாம்னு நினைச்சேன்’ என்பவர்கள் எத்தனை பேர்? உடல் நலம் கேட்கவா வந்தார்? இல்லை, கடன் வாங்கத்தான் வந்தார். உடல்நலம் விசாரிக்க வந்ததாக பொய் கூறுகிறார். அவரிடமும் பேசிக் கொண்டிருக் கத்தான் வேண்டியிருக்கிறது!
ஏதோ ஒரு விஷயத்தை நம்மிடம் தெரிந்துகொள்ள வந்தது போல் பாவனை! ஆனால் அவருக்குத் தெரிந்த ஒன்றை நம்மிடம் சொல்ல வந்ததே உண்மை!
சிலப்பதிகாரத்திலே பாண்டி யன் “ஏன் சார், கோவலனைக் கொன்றான்?” என்று கேட்டு அவசரமாகப் போகும் நம்மை வழியில் நிறுத்துவார். நாமும் நம் வேலையை விட்டு, அவருக்கு விளக்கம் கூற முற்பட்டு ‘‘கோவலன் மனைவி பேரு கண்ணகிங்க. அவன் அவளை அழைச்சிட்டு மதுரைக்கு வாணி கம் செய்ய வந்தாங்க’’ என்று ஆதியோடு அந்தமாகச் சிலப்பதி காரம் சொல்ல முற்படும் வேளையில்,
‘கொஞ்சம் இருங்க’ என்று நம்மை நிறுத்திவிட்டு, தான் மதுரைக்குப் போனவாரம் சென்றிருந்ததாகவும், அங்கு ஒரு மேடான பகுதியைப் பார்த்த தாகவும், விஷயந்தெரிந்தவர் களை விசாரித்ததாகவும், அங்கு தான் கோவலன் கொலை செய்யப்பட்டதாகவும், மன்னனே நேரில் வந்து அரிவாளால் வெட்டியதாகவும், நீதி தவறி மன்னன் வெட்டியதால் கோவ லன் புதைக்கப்பட்ட மேடு கரை யாமல் இன்றுவரை அப்படியே இருப்பதாகவும் எத்தனையோ
முறை எத்தனையோ பேர் கரைத்தும் மேடு கரையவில்லை என்றும், இந்த அதிசயத்தை வெளிநாட்டுக்காரர்கள் வந்து பார்த்துச் செல்வதாகவும், தான் அதைப்பார்த்து அதிசயித்து நின்றதாகவும் கூறுவார்.
அதோடு நிறுத்தமாட்டார். ‘நீங்கள் மதுரை போனதே இல்லையா? மேட்டைப் பார்க் கவே இல்லையா? அந்த மேட்டைக் கூடப் பார்க்காமல் மதுரை போய் வந்தால் என்ன பிரயோசனம் என்றும் வேறு கேட்டு நம்மைச் சங்கடத்தில் ஆழ்த்துவார்.
இவர் நம்மிடமிருந்து சிலப்ப திகாரம் தெரிந்து கொள்ள வர வில்லை. தான் அறிந்து வைத்தி ருக்கும் ஒரு கட்டுக் கதையை நம் தலையில் கட்டப் பார்க்கிறார். அவர் நேரமும் பாழ், நம் நேரமும் வீண். வீண் கதை கேட்டதே மிச்சம்.
பொதுவான இடங்களில் நம் நாவுக்கு வேலை தராமல் காதைத் தீட்டிவைத்துக் கொண்டு அனுப வக் கொள்முதல் செய்வதுதான் அறிவுடைமை.
பேருந்துப் பயணம், ரயில் பயணம், நடைப்பயணம் ஆகிய பொழுதுகளில் நாவுக்கு வேலை தராமல் இருப்பது சாலச் சிறந்தது. வீண் விவாதங்கள் முட்டாளிடம் பேசி அதிமுட்டாளாதல் போன்ற அசிங்கங்களில் அகப்பட்டுக் கொள்ளும் அபாயம் நேரும்.
காதைத் திறந்துகொண்டு – அதாவது காதில் வாங்காமல் இருந்துவிடாமல் – கேள்வி ஞானம் பெறலாம்.
சங்கீதம் சொல்லித்தரும் சங்கீத வித்வான்களிடம் ஒரு பழக்கம் உண்டு. சிஷ்யனுக்கு அரங்கேற்ற அளவிற்குச் சொல்லிதந்த பிறகு அவனுக்கு விடைதரும் நேரத்தில், “அப்பா, எனக்குத் தெரிந்ததெல்லாம் சொல்லிக் குடுத்துவிட்டேன். இனி உன் கேள்வி ஞானத்தால் சங்கீதத்தை விருத்தி செய்துகொள்” என்று கூறி அனுப்பி வைப்பார்.
“கேள்வி ஞானம்” என்பது அவ்வளவு முக்கியமானது. கேட்டுக்கேட்டே சிறந்த ஞானம் பெற்றவர்கள் உண்டு. உதாரணத் துக்குச் சில சொல்வேன்.
ஒரு இளைஞன் நன்றாகக் குடித்துவிட்டு, பேருந்தில் ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்தான். தாறு மாறாகப் பேசுகிறான். பக்கத்தில் அமர்ந்திருப்போரிடமெல்லாம் தகராறு செய்கிறான். மூன்றுபேர் அமரும் இருக்கையில் அவன ருகே அமர்ந்து ஒவ்வொருவராக, அவன் தொல்லை பொறுக்க முடியாது எழுந்து சென்று விடுகின்றனர். மூவர் இருக்கையில் இப்போது அவன் மட்டும்.
பேருந்தில் நிறையப்பேர் அமர இடமின்றி நின்று வருகின்றனர். எனினும் அவன ருகில் அமர எவரும் விரும்ப வில்லை. நின்றாலும் பரவா யில்லை, அவன் அருகில் மட்டும் அமரக்கூடாது என்ற உறுதியில் எல்லோரும் உள்ளனர். அப்போது நின்று கொண்டிருந்த கிழவி (60 வயதுக்குமேல்) “என்னப்பா இப்படி பயப்படுறீங்க? என்னமோ கொஞ்சம் குடிச்சிட்டான் அவ் வளவுதானே! நம்ம புள்ளயா இருந்தா இப்படி ஒதுக்கு வோமா?” என்று கூறிக் கொண்டே அவனருகில் சென்று உட்கார்ந்தார்.
சற்று நேரம் அந்தக் கிழவியைப் பார்த்துக் கொண்டே இருந்த குடிகாரன் மெதுவாக அந்த அம்மையாரிடம் பேச்சுக் கொடுக்கத் தொடங்கி, “ஏ கிழவி! இப்பவே நீ இவ்வளவு அழகா இருக்கியே? உன் வயசுல நீ என்னமா இருந்திருப்பே? பயலுவ உன்னைச் சுத்தி சுத்தி வந்திருப் பானுங்களே?” என்று பின் னோக்கி பார்வையைச் செலுத்தத் தொடங்கினான்.
“போடா நாயே! பொறுக்கி! நீ நாசமாப் போவே” என்று திட்டிச் சாபம் கொடுத்துவிட்டு எழுந்து நின்று கொண்டார். வெகுதூரம் தள்ளிப்போய் நின்று கொண்டார். மலத்தை மிதித்து விட்ட சகியாமை முகத்தில் தோன்ற கூச்சத்தோடு நின்றபடி பயணம் செய்தார்.
இதைக் கண்டும் கேட்டும் நான் உணர்ந்த ஒன்று உண்டு. குடிகாரனிடம் பேச்சுக் கொடுத் தால் மானம் பறிபோகும்.
திருக்குறளில்,
களித்தானைக் காரணங் காட்டல் தூநீர்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று
என்று சொல்லப்பட்டிருப் பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன். குடிகாரனுக்கு அறிவுரை சொல்லித் திருத்த நினைக்காதே. மெழுகுவர்த்தி கொண்டு நீருக்குள் தொலைந்த பொருளைத் தேடிக் கண்டுபிடிக்க முடியுமா? என்று வள்ளுவர் சொல் வதற்கு பேருந்தில் ஓர் எடுத்துக் காட்டாக அல்லவா அந்தச் சம்பவம் அமைந்தது!
பேருந்து ஓட்டுநர் ஓர் அம்மையாரிடம் “அந்த ஊரிலே எல்லாம் இந்த பஸ் நிக்காதும்மா” என்றபோது அந்த அம்மையார், “நீ பிரேக்கைப் போடுய்யா, நிக்குதா? இல்லையான்னு பார்ப் போம்,” என்றதும் ஓட்டுநர் முகத்தில் விளக்கெண்ணெய்!
நான் ஏதாவது அந்தப் பெண் மணியிடம் பேசியிருந்தால் எனக்கும் அதே விளக்கெண் ணெய்தானே? இதனால்தான், பொது இடங்களில் வாயைத் திறக்காமல் செவி சாய்க்க வேண்டும் என்பது!

No comments:

Post a Comment