Thursday, March 24, 2011

காமராஜரின் பண்பு .



நெல்லைக்கண்ணன் : கடந்த 1962 பொதுத் தேர்தல். செய்தியாளர்கள், நேருவிடம் கேட்கின்றனர், "பிரதமர் ஆனவுடன் நாட்டிற்கு என்ன செய்யப் போகிறீர்கள்?' நேரு கோபம் கொள்கிறார். "படித்த நீங்கள், எப்படி இந்தக் கேள்வியைக் கேட்கலாம்? தேர்தலுக்கு ஒரு மாதம் இருக்கிறது. தேர்தல் முடிந்து, எந்தக் கட்சிக்கு பெரும்பான்மை எனத் தெரிந்து, அப்படியே காங்கிரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், கட்சியின் எம்.பி.,க்கள் கூடித் தான், தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இத்தனை இருக்கிற போது, எப்படி இப்படி ஒரு ஜனநாயக விரோதமான கேள்வியைக் கேட்கலாம்' என்றார்.
இன்றோ, "ஆறாவது முறையும் நாங்கள் தான்' என்கின்றனர். இதுவே ஜனநாயகத்தையும், மக்களையும் அவமதிக்கிற செயல் தான் என்பதை, யாரும் உணர மறுக்கின்றனரே.


கடந்த, 1967 தேர்தல். காமராஜர் தோற்றுப் போகிறார். விருதுநகரிலே நண்பர்கள், மறு எண்ணிக்கைக்கு முயல்கின்றனர் எனத் தெரிந்தவுடன் காமராஜர், அதை உடனடியாக நிறுத்தச் சொல்கிறார். "நாம வாங்கின சுதந்திரம் உண்மை. நேருவும், காங்கிரசும் தந்த ஜனநாயகம் உண்மை என்பதெல்லாம் நிரூபணமாயிட்டுல்லா. நம்ம உழைப்பு வீண் போகல. அதான் நம்ம தோல்வி உணர்த்தும் பாடம்' என்றார்.

அடுத்து அவர் சொன்ன செய்தி, "தி.மு.க., இப்பத்தான் ஆட்சிக்கு வந்திருக்கு. ஆட்சியின் நெளிவு சுளிவுகளைப் புரிந்து கொள்ளவே ஆறு மாதம் ஆகும். அதுவரை இந்த ஆட்சியை யாரும் விமர்சிக்கக் கூடாது' என்றார்.

அண்ணாதுரையும், ஒரு புதிய பண்பாட்டை உருவாக்கினார். காமராஜர், பக்தவத்சலம் என்று அனைவரையும் போய் பார்த்து, ஆதரவைக் கேட்டார். ஆறு மாதம் கழித்து தான் காமராஜர், ஆட்சி குறித்து தன் கருத்துக்களைத் தெரிவித்தார். அதற்கு கருணாநிதி, "ஒரு குழந்தை பேசவேயில்லை என்று தாய் வருத்தப்பட்டாள். அந்தக் குழந்தை பேசியது, "அம்மா நீ எப்ப தாலியை அறுப்பாய்' என்று கேட்டது. அது போலத் தான் காமராஜர் பேசுகிறார்' என்று கூறினார்.
பிளவுபட்ட காங்கிரசின் பழைய காங்கிரஸ் தலைவராக காமராஜர், 1971 பொதுத் தேர்தலைச் சந்திக்கிறார். இந்திரா தலைமையிலான காங்கிரஸ் வெற்றி பெற்றது. "ரஷ்யாவில் இருந்து மை கொண்டு வந்து, ஓட்டுச் சீட்டுகளில் தடவி, வெற்றி பெற்றுவிட்டனர்' என்றார் குமரி அனந்தன்.

அது குறித்து சோ கேட்ட போது, காமராஜர், "தோத்துப் போயிட்டோம்னேன். இது என்ன சிறுபிள்ளைத் தனமான பேச்சு' என்று கடிந்து கொண்டார்.

"உங்கள் காலுக்குச் செருப்பாய் இருந்தேனே. கடலில் தூக்கி வீசினால் கட்டுமரமாய் இருந்தேனே. உங்கள் வீட்டில் பத்துப் பாத்திரம் துலக்குகிற வேலைக்காரியாக இருந்தேனே' என்றெல்லாம் புலம்பவில்லை.

நாகர்கோவில் இடைத்தேர்தல். காமராஜர் காங்கிரஸ் வேட்பாளர். சுதந்திரக் கட்சி, அவரை எதிர்த்துப் போட்டியிடுகிறது. 1963ல் தி.மு.க.,வில் இருந்து கொண்டே, "காமராஜர் என் தலைவர்; அண்ணாதுரை என் வழிகாட்டி' என்று பேசிய எம்.ஜி.ஆர்., "காமராஜரை எதிர்த்து பிரசாரம் செய்ய வர மாட்டேன்' என்றார்.

புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று, "குளிரூட்டப்பட்ட அறைகளில் தான் இருக்க வேண்டும்' என்று டாக்டர் மில்லரால் சொல்லப்பட்ட அண்ணாதுரையை, திரைப்பட ஒளிவிளக்குகளிலே, வெப்பத்தில் நிறுத்தி, காமராஜருக்கு எதிராக பேச வைத்து, அந்த திரைப்படத்தை நாகர்கோவில் தொகுதி முழுவதும் போட ஏற்பாடு செய்தவர் கருணாநிதி. இன்றைய காங்கிரஸ் வீரர்களுக்கு இதுவெல்லாம் நினைவில் இருக்காது.

நாகராஜா திடலில் பொதுக் கூட்டம். சின்ன அண்ணாமலை பேசிக்கொண்டிருக்கிறார். காமராஜர் வந்துவிட்டார். சின்ன அண்ணாமலை, ராஜாஜி குறித்து பேசத் துவங்கினார். திடீரென எழுந்த காமராஜர், அவர் சட்டையைப் பிடித்து, இழுத்து, "நிறுத்துன்னேன்... அவரை நீ எப்படிப் பேசலாம்' என்று நிறுத்தினார். இத்தனைக்கும், காமராஜரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தியதே ராஜாஜி தான்.

No comments:

Post a Comment