வள்ளல் எம்ஜிஆர்!
வள்ளல் எம்ஜிஆர்!
1980-மக்களவைத் தேர்தல் பிரச்சாரம். திருநெல்வேலியில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார் புரட்சித் தலைவர் முதல்வர் எம்ஜிஆர்.
அப்போது அவரிடம் மனு தர ஒரு பெண் கையில் குழந்தையோடு ஓடோடி வருகிறார். ஆனால் முண்டியடிக்கும் கூட்டம். எம்ஜிஆரை நெருங்கக் கூட முடியவில்லை. இவரைப் போல நிறைய பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள் அவரிடம் மனு கொடுக்க போட்டி போட, வண்டியை நிறுத்தச் சொல்லிவிட்டு அனைவரிடமும் மனுக்களைப் பெற்றுக் கொண்டார் எம்ஜிஆர்.
அப்படியும் அந்தப் பெண்ணால் மனு கொடுக்க முடியவில்லை. வண்டியை அந்தப் பெண்ணுக்கு அருகில் நிறுத்தச்சொல்லி, அந்தப் பெண் கையில் ஒரு நோட்டுப் புத்தகம் மாதிரியிருந்த ஒரு டைரியை அப்படியே பெற்றுக் கொண்டார் எம்ஜிஆர்.
‘முதல்வரிடம் மனு சேர்ந்துவிட்டது. நிச்சயம் தனக்கு விடிவு பிறந்துவிடும்’ என்ற நம்பிக்கையுடன், ஒரு கடையில் குழந்தைக்கு பால் வாங்க பணம் எடுக்க முயன்றபோதுதான், அவர் வைத்திருந்த பணம், முதல்வர் எம்ஜிஆரிடம் தந்த டைரிக்குள் இருந்தது நினைவுக்கு வந்தது. அத்துடன் தனது ஒரிஜினல் சான்றிதழ்கள் அனைத்தையும் மனுவோடு சேர்த்து அந்த டைரிக்குள்ளேயே வைத்து கொடுத்துவிட்டிருந்தார், தவறுதலாக.
அந்தப் பெண்ணுக்கு சொந்த ஊர் சங்கரன் கோயில். என்ன செய்வதென்றே தெரியாமல், அழுது புலம்பியவருக்கு அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் ஆறுதல் சொல்லி, பணம் கொடுத்து அனுப்பி வைத்தனர்.
ஆனால் அடுத்த சில தினங்களில் தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. எம்ஜிஆரின் அதிமுகவுக்கு மக்களவைத் தேர்தலில் இரண்டு இடங்கள் மட்டுமே கிடைத்தன. உடனடியாக பிரதமர் இந்திரா காந்தியால் ஆட்சியும் கலைக்கப்பட்டுவிட்டது. அப்போதுதான் ராமாவரம் தோட்டத்துக்கு வந்தார் மனுகொடுத்த அந்தப் பெண்.
கொஞ்சம் காத்திருந்த பின் எம்ஜிஆரைப் பார்த்த அவர், தான் மனு கொடுத்ததையும் அத்துடன் தனது சான்றிதழ்களையும் மறதியாகக் கொடுத்துவிட்டதையும் குறிப்பிட்டார்.
“அய்யா, அந்த டைரில என் ஒரிஜினல் சர்ட்டிபிகேட், பணம் ரூ 17 எல்லாம் வச்சிருந்தேன். புருசன் இல்லாம, 2 வயசு குழந்தையோட தனியா கஷ்டப்படற நான் இனி என்ன பண்ணுவேன்.. எனக்கு அந்த சர்டிபிகேட் வேணும்”, என்று அழுதார்.
“அழாதேம்மா… நான் மீண்டும் முதல்வரானால், உனக்கு வேலை போட்டுத் தர்றேன். இப்போ உன் சர்ட்டிபிகேட்டை கண்டுபிடிச்சி தரச் சொல்கிறேன்,” என்ற எம்ஜிஆர், அந்தப் பெண்ணை சாப்பிடச் சொல்லி, ரூ 300 பணமும் கொடுத்து ஊருக்கு அனுப்பி வைத்தார்.
அவர் முதல்வராக இருந்தபோது வாங்கப்பட்ட மனுக்கள். இப்போது அவர் பதவியில் இல்லை. அந்த மனுக்களை தேடிக் கண்டுபிடிப்பதும், அதற்குள் இருக்கும் அந்தப் பெண்ணின் சான்றிதழைத் தேடுவதும் சாமானியமான காரியமா?
ஆனால் தன் உதவியாளர்களிடம் சொல்லி, கோட்டையில் முதல்வர் அலுவலகத்தில் மூட்டைகளாகக் கட்டிப் போடப்பட்டிருந்த மனுக்களை ஆராய்ந்து பார்க்கச் சொன்னார். அன்று நடந்தது ஆளுநரின் ஆட்சிதான் என்றாலும், கோட்டையில் எம்ஜிஆர் பேச்சுக்கு மறுபேச்சில்லை. உடனடியாக மூட்டைகளைத் தேடி அந்தப் பெண்ணின் டைரியைக் கண்டுபிடித்து விட்டனர். எல்லாம் அப்படியே இருந்தது. அந்தப் பெண்ணுக்கு தகவல் அனுப்பி வரவழைத்து டைரியைக் கொடுத்தபோது, அங்கிருந்தவர்களின் கால்களில் விழுந்து வணங்கி பெற்றுக் கொண்டார் அந்தப் பெண்.
ஆனால் தன் உதவியாளர்களிடம் சொல்லி, கோட்டையில் முதல்வர் அலுவலகத்தில் மூட்டைகளாகக் கட்டிப் போடப்பட்டிருந்த மனுக்களை ஆராய்ந்து பார்க்கச் சொன்னார். அன்று நடந்தது ஆளுநரின் ஆட்சிதான் என்றாலும், கோட்டையில் எம்ஜிஆர் பேச்சுக்கு மறுபேச்சில்லை. உடனடியாக மூட்டைகளைத் தேடி அந்தப் பெண்ணின் டைரியைக் கண்டுபிடித்து விட்டனர். எல்லாம் அப்படியே இருந்தது. அந்தப் பெண்ணுக்கு தகவல் அனுப்பி வரவழைத்து டைரியைக் கொடுத்தபோது, அங்கிருந்தவர்களின் கால்களில் விழுந்து வணங்கி பெற்றுக் கொண்டார் அந்தப் பெண்.
“கடலில் போட்ட ஒரு சின்ன கல்லைப் தேடிக் கண்டுபிடிச்ச மாதிரி என் டைரியைக் கண்டுபிடிச்சிக் கொடுத்திட்டீங்க. என் தெய்வம் எம்ஜிஆரை நம்பினேன். என் வாழ்க்கை திரும்ப கிடைச்ச மாதிரி இருக்கு. நிச்சயம் மீண்டும் அவர் முதல்வராவார். எனக்கு வேலை கிடைக்கும்,” என்று சொல்லிவிட்டுப் போனார்.
அவரை மாதிரி பல லட்சம் தாய்மார்களின் இதயங்களை வென்றவரல்லவா எம்ஜிஆர்… சில வாரங்களுக்குப் பின் மீண்டும் முதல்வரானார்.
அந்தப் பெண் மீண்டும் ராமாவரம் தோட்டத்துக்கு வந்த முதல்வர் எம்ஜிஆரிடம் தன் மனுவை நினைவுபடுத்த, சில தினங்களில் அவருக்கு அரசு வேலை கிடைத்துவிட்டது!
தி நகரில் உள்ள எம்ஜிஆரின் இல்லத்துக்கு ஒருமுறை சக பத்திரிகையாளருடன் சென்றிருந்தபோது, இந்த சம்பவத்தை சொன்னார் எம்ஜிஆரின் உதவியாளர் மறைந்த முத்து. “தினமும் இதுபோல பத்து சம்பவங்களை என்னால சொல்ல முடியும் சார். இன்னிக்கு நினைச்சுப் பாத்தா, அரசியல் திருடர்கள் நிறைந்த இந்த உலகத்திலயா இவ்வளவு வள்ளல் தன்மையும் மனிதாபிமானம் கொண்ட மனிதரும் இருந்தார்னு வியப்பா, பிரமிப்பா இருக்கு,” என்றார். ஒப்பனையோ மிகைப்படுத்தலோ இல்லாத வார்த்தைகள்!
கடையேழு வள்ளல்களைப் பற்றி நாம் படித்தது வெறும் பாடங்களில். அதுவும் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய கதைகள் அவை. ஆனால் இந்த நூற்றாண்டில் அப்படியொரு வள்ளலை வாழ்க்கையிலேயே பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததை என்னவென்பது!
தன்னை விமர்சித்தவர்களையும் வெட்கித் தலைகுனிய வைத்த பெரும் வள்ளல் பொன்மனச் செம்மல் எம்ஜிஆர். என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமிருக்க முடியாது.
No comments:
Post a Comment