22 கஜங்கள், 24 ஆண்டுகள், மறக்க முடியாத தடங்கள் | |
இந்திய கிரிக்கெட் அணி 1983இல் உலகக் கோப்பையை வென்றது. அதுவரை சோப்ளாங்கியாக இருந்த அணி உலக கிரிக்கெட் அரங்கில் முதலிடம் பிடித்ததை யாராலும் நம்ப முடியவில்லை. அதன்பிறகு இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு ரசிகர்கள் பெருகினார்கள். ஆனால் இந்த உலகக் கோப்பையை வெல்வதற்கு முன்பும் பின்னரும் இந்தியாவில் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் இருந்தார்களே ஒழிய அது மிகச் சிறந்த அணியாக இருந்ததில்லை. 80களில் சுனில் காவஸ்கர், குண்டப்பா விஸ்வநாத், திலிப் வெங்சர்க்கார் போன்ற மிகச் சிறந்த மட்டையாளர்களும் கபில்தேவ், மொஹீந்தர் அமர்நாத், மனோஜ் பிரபாகர் போன்ற ஆல்ரவுண்டர்களும் இருந்தார்கள். சந்தீப் பாட்டீல், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் போன்றவர்கள் இந்தியர்களுக்குப் பழக்கமில்லாத அதிரடி ஆட்டத்தை டெஸ்ட் அரங்கில் காட்டிப் பரபரப்பு ஏற்படுத்தினார்கள். முகமது அசாருதீன், நவ்ஜோத் சிங் சித்து போன்ற நேர்த்தியான மட்டையாளர்கள் புதிதாக இணைந்தார்கள். இருந்தாலும் இந்திய அணி அதிக வெற்றிகளைக் குவிக்கும் அணியாக இருக்கவில்லை. உலக அரங்கில் மதிப்புப் பெற்ற அணியாகவும் இருக்கவில்லை. காரணம் உலக அரங்கில் சவால்விடும் அளவுக்கு அசாத்தியமான திறமையும் போராடும் குணமும் இவர்கள் யாரிடமும் இணைந்திருக்கவில்லை. ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், மேற்கு இந்தியத் தீவுகள் ஆகிய அணிகளை அவர்களின் சொந்த மண்ணில் எதிர்கொள்ளத் திராணியற்ற அணியாகவே இந்திய அணி இருந்தது. இந்தச் சூழலில்தான் 16 வயதுச் சிறுவன் ஒருவன் அணிக்குள் வந்தான். மும்பையில் பள்ளிப் போட்டிகளிலும் ரஞ்சி கோப்பையிலும் அவன் அடித்த ஓட்டங்கள் அவனை இந்திய அணிக்கு ஆடவைத்தன. 1989 நவம்பர் 15 அன்று பாகிஸ்தான் அணியை அதன் மண்ணில் எதிர்கொண்ட இந்திய அணியில் இடம்பிடித்தான். அவன் பெயர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர். அந்தப் பையன் இன்று கிரிக்கெட் களத்தில் இல்லை. எத்தனையோ பேர் வந்துபோன களம்தான் அது. ஆனால் இவனது வருகையும் விடைபெறலும் சாதாரணமானதாக இல்லை. அந்தச் சிறுவன் உலகப் புகழ்பெற்ற மட்டையாளனாக, கோடிக்கணக்கான ரசிகர்களால் கிரிக்கெட்டின் கடவுளாக ஆராதிக்கப்படுபவனாக, நேற்றைய சாதனையாளர்களும் சமகால வீரர்களும் வியந்து பார்க்கும் நாயகனாக வளர்ந்து நிற்கிறான். தேசமே அவனுக்குக் கண்ணீருடன் பிரியாவிடை தருகிறது. ஊடகங்கள் அவன் புகழ் பாடிக்கொண்டிருக்கின்றன. வீடுகளின் வரவேற்பறைகளும் பொது இடங்களும் அவனைப் பற்றிய உரையாடல் களமாக மாறியிருக்கின்றன. இந்த 24 வருட இடைவெளியில் சச்சின் செய்த சாதனைகளையும் கடந்து வந்த சோதனைகளையும் வைத்துத் தனிப் புத்தகமே எழுதலாம். ஆனால் 24 வருடங்கள் முன்னணி வீரனாக, நம்பிக்கை நட்சத்திரமாக, கிரிக்கெட்டில் ஒளி குன்றாச் சூரியனாக அவர் விளங்கியமைக்குச் சாதனைகளை மீறி வேறு பல காரணங்கள் இருக்கின்றன. இந்தியாவை எள்ளலுடன் எதிர்கொண்ட அணிகள் சச்சின் டெண்டுல்கரை மட்டும் எளிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர் களத்தில் இருக்கும் வரை இந்த அணிகளில் உள்ள அனைவரும் தங்கள் முழுத் திறமையை வெளிப்படுத்திக் கவனத்தைச் சிதறவிடாமல் விளையாடுவார்கள். கார்ட்னி வால்ஷ், கர்ட்லி ஆம்ப்ரோஸ், ஆலன் டொனால்ட், வாசிம் அக்ரம். வக்கார் யூனுஸ், க்லென் மெக்ரா, ஷேன் வார்ன், முத்தையா முரளீதரன், டேல் ஸ்டெயின் ஆகிய உலகப் பெரும் பந்து வீச்சாளர்கள் சச்சினுக்குப் பந்து வீசும்போது மட்டும் மிகக் கவனமாகச் செயல்படுவார்கள். ஏனெனில் மிகச் சிறந்த பந்துகளில்கூட அனாயசமாக ஓட்டமெடுக்கும் வித்தையில் சச்சின் தேர்ந்திருந்தார். இது மோடி மஸ்தான் வித்தையல்ல. ஒரு நாளின் ஏழு மணிநேரங்களைப் பயிற்சியில் செலவழித்த அர்ப்பணிப்புணர்வுக்குக் கிடைத்த பரிசு. ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளை விளையாட்டிலாவது இந்தியாவால் ஆதிக்கம் செலுத்த முடிந்ததற்கு முக்கியமான காரணம் சச்சின். 90களில் பொருளாதார வளர்ச்சியின் ஆரம்பக் கட்டத்தில் இருந்த இந்தியர்களுக்கு, குறிப்பாக நடுத்தர வர்கத்தினருக்கு இதனால் கிடைத்த மனத்திருப்தி சச்சினை அவர்களது ஆதர்ச நாயகனாக்கியது. சச்சின் ஆட்டமிழந்தால் இந்திய அணி தோற்றுவிடும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் மட்டுமல்ல, எதிரணிகளிடமும் பல ஆண்டுகளுக்கு நிலவியது. வெற்றிபெறுவதை விட சச்சின் விக்கெட்டை எடுப்பதை எதிரணியினர் அதிகமாகக் கொண்டாடுவார்கள். சச்சின் ஆட்டமிழந்த மாத்திரத்தில் பல வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டி அணைக்கப்படும். மறுநாள் காலைதான் போட்டியின் முடிவைத் தெரிந்துகொள்வார்கள். இந்தியா வெற்றிபெற்றது என்ற செய்தி மிக அரிதாகவே இடம்பெறும். சச்சின் ஆட்டத்தில் பல்வேறு நுணுக்கங்களைப் புகுத்தினார். வெறுமனே நிற்பது அல்ல கிரிக்கெட் என்பதை நிறுவினார். நல்ல அளவில் வரும் பந்தை எப்படி எதிர்கொள்வது என்பதிலும் முன்னே சென்று ஆடும் தடுப்பாட்டத்தை எப்படி ஓட்டம் எடுக்கும் உத்தியாகப் பயன்படுத்துவது என்பதிலும் துடுப்பாட்ட மட்டைவீச்சில் புது இலக்கணம் வகுத்தார். பின்காலில் சென்று அவர் ஆடும் அனாயாசமான கவர் ட்ரைவும் தனிப்பாணியிலான ஸ்ட்ரெய்ட் ட்ரைவும் கிரிக்கெட்டின் மிக அழகான காட்சிகளில் ஒன்றாக நிலைபெற்றுள்ளன. பெடல் ஸ்வீப் போன்ற சில ஷாட்கள், லெக் ஸ்பின்னரை இறங்கி வந்து இன்சைட் அவுட் ஷாட் அல்லது லாஃப்ட்ட் ஷாட் மூலம் இவர் எதிர்கொண்ட விதம் பிற மட்டையாளர்களுக்குப் பாடமாக விளங்கின. யாரும் ஆடாதபோதும் சச்சின் தொடர்ந்து நன்றாக ஆடினார். தொண்ணூறுகள் முழுவதும் இந்த நிலை நீடித்தது. இந்தக் குணத்தின் அடையாளமாக 1997 ஷார்ஜா போட்டிகளையும் 1999 சென்னை போட்டியையும் சொல்லலாம். புத்தாயிரத்தின் தொடக்கத்தில் இந்திய அணி வலுப்பெறத் தொடங்கியது. ஆனால் அப்போதும் அந்நிய மண்ணில் பெரிதாகச் சாதிக்காத அணியாகவே இருந்தது. தென் ஆப்ரிக்காவில் நடந்த 2003 உலகக் கோப்பையில் மிகச் சாதாரணமான அணியாக ஆடத் தொடங்கியது. ஆனால் இறுதிப் போட்டிவரை முன்னேறியது. அதில் சச்சினின் சதங்களும் அரை சதங்களும் முக்கியப் பங்காற்றின. சச்சின் பல மோசமான உடல் காயங்களைச் சந்தித்திருக்கிறார். அவற்றிலிருந்து போராடி மீண்டு வந்தார். அந்தக் காயங்களால் அவரது ஆட்டத்திறன் பெரிதாகப் பாதிக்கப்படவில்லை. சந்தர்ப்பத்துக்கேற்பத் தன் ஆட்டத்தைத் தகவமைத்துக்கொள்ளும் திறன் அவருக்கு இருந்தது. 2007 உலகக் கோப்பையில் நம்பிக்கையுடன் களம் கண்ட இந்தியா முதல் சுற்றிலேயே வெளியேறியது. அப்போதுதான் சச்சினுடைய கிரிக்கெட் வாழ்வின் அந்திமக் காலம் தொடங்கிவிட்டதாகப் பலர் கருத ஆரம்பித்தார்கள். ஆனால் சச்சின் இதிலிருந்தும் மீண்டுவந்தார். 2007இல் இங்கிலாந்திலும் ஆஸ்திரேலியாவிலும் நடந்த டெஸ்ட் தொடர்களில் சிறப்பாக ஆடினார். மீண்டும் 2009, 2010ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கத் தொடங்கினார் சச்சின். மீண்டும் ஓய்வுபெற வேண்டும் என்ற குரல்கள் எழும்பின. ஆனால் 2009இல் ஆஸ்திரேலியாவுடன் அடித்த அதிவேக 175ஐக் கொண்டாடினார்கள் ரசிகர்கள். 2010இல் தென் ஆப்ரிக்காவுடனான ஒரு நாள் போட்டியில் 200 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்துத் தன் ஆட்டத்துக்கு வயதாகவில்லை என்று நிரூபித்தார் சச்சின். 2011 உலகக் கோப்பையை இந்தியா வென்றதிலும் சச்சினுக்கு முக்கியமான பங்கு இருந்தது. தொடரில் மிக அதிக ஓட்டங்கள் குவித்த முதல் இரண்டு வீரர்களில் ஒருவர் சச்சின். அப்போது அவருக்கு 38 வயது. 2011 உலகக் கோப்பைக்குப் பிறகு சச்சினின் ஆட்டத்தில் தடுமாற்றம் தெரிந்தது. 100ஆவது சதத்தை நோக்கிய பயணம் மிகக் கடுமையானதாக இருந்தது. அவ்வப்போது அரை சதங்கள் எடுத்தார். சில போட்டிகளில் 80களிலும் 90களிலும் ஆட்டமிழந்தார். வெற்றிக்குப் பெரிதாகப் பங்களிக்க முடியவில்லை. கடைசியாக வங்காளதேச அணியுடன்தான் 100ஆவது சதத்தை அவரால் அடிக்க முடிந்தது. அதன்பின் சச்சின் பெரிய சாதனை எதுவும் செய்யவில்லை. ஐம்பதுகளை நூறாக மாற்றவும் நெடுநேரம் நின்று ஆடவும் ஆட்ட நுணுக்கத்துடன் உடல்திறன் உச்சத்தில் இருப்பதும் முக்கியம். 38 வயதுக்குப் பிறகு அதை எதிர்பார்க்க முடியாது. நடுவர்களின் தவறுகளுக்கும் அவர் பலியாகிக்கொண்டிருந்தார். ஆனால் எப்போது வேண்டுமானாலும் பழைய திறனுடன் ஆடிவிடுவார் என நினைக்கும் விதத்தில்தான் சச்சின் அடிக்கும் ஷாட்கள் இருந்தன. இந்த ஆண்டு சென்னையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் கடைசி ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிராகவும் ஆடிய ஆட்டங்களே இதற்குச் சான்று. மும்பை வான்கடே மைதானத்தில் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தன் கடைசி இன்னிங்க்ஸை விளையாடினார். வரலாறு காணாத அந்த எதிர்பார்ப்புகளின் அழுத்தம் அவர் ஆட்டத்தில் தெரியவில்லை. சதம் அடிக்கவில்லை என்பது ஏமாற்றமாக இருந்தாலும் 74 ஓட்டங்கள் எடுத்த அந்த ஆட்டம் தடுமாற்றங்கள் அற்றதாக இருந்தது. இன்னும் சிறிது காலம் இவர் ஆடக் கூடாதா என்று அனைவரையும் ஏங்க வைத்தது. ஆடுகளத்தை தொட்டுக் கும்பிட்டுவிட்டு மைதானத்திலிருந்து வெளியேறும்போது அவர் கண்களில் கண்ணீர் வழிந்தது. தன் வாழ்வின் பகுதியாகவே மாறிவிட்ட கிரிக்கெட் இல்லாமல் எப்படி வாழப்போகிறோம் என்ற அச்சத்தின் கண்ணீர் அது. அவர் எல்லாவற்றுக்கும் மேலாக கிரிக்கெட்டை நேசித்தவர். எனவேதான் அவரால் கடைசிப் போட்டிக்குக்கூட முழு ஈடுபாட்டுடன் பயிற்சி எடுக்க முடிந்தது. கடைசிப் போட்டியில் தவறான ஷாட் ஆடி ஆட்டமிழந்ததைப் பற்றித் தன் குருவுடன் விவாதிக்க முடிந்தது. விஸ்டன் இந்தியா என்னும் அமைப்பு சச்சினைப் பற்றி ஒரு சிறப்பிதழை வெளியிட்டிருக்கிறது. அதில் புள்ளிவிவரம் சார்ந்த ஒரு கட்டுரை இடம்பெற்றிருக்கிறது. பல்வேறு கோணங்களில் சச்சினின் ஆட்டத்தை அலசும் அட்டவணைகளைப் பார்த்தாலே சச்சின் தன் சமகாலத்தவர்களைவிட முன்னணியில் இருந்ததைத் தெரிந்துகொள்ளலாம். ஆனால் அவரது மிகப் பெரிய சாதனை புள்ளிவிவரங்களின் கணக்குகளுக்கு அப்பாற்பட்டது. ஒவ்வொரு முறை களத்தில் இறங்கும்போதும் மாபெரும் நெருக்கடியைச் சுமந்து ஆட வேண்டிய நிர்ப்பந்தத்தைத் தாண்டி அவர் இத்தனை சாதனைகளைச் செய்திருக்கிறார் என்பதுதான் மிகப் பெரிய சாதனை. இத்தனை கோடிப் பேரின் நம்பிக்கை நட்சத்திரம், இளம் ஆட்டக்காரர்களின் ஆதர்ச நாயகன், எதிரணிகளின் முதன்மை இலக்கு. இவையெல்லாம் புள்ளிவிவரங்களில் தெரியாது. அவர் அவுட் ஆகும்போது சொந்த துக்கமாக அதை மக்கள் கருதுவதும் சிறப்பாக ஆடும்போது தாங்களே சாதித்ததாகக் கருதுவதும் வேறு யாருக்கும் நடக்காத அதிசயங்கள். இந்தத் தன்மைகள்தாம் சச்சினை கிரிக்கெட் வரலாற்றிலேயே உலகில் தனித்துக் காட்டுகின்றன. சச்சின் ஓய்வுபெறும் போட்டியின் கடைசி நாள் அன்று அவருக்கு பாரத ரத்னா விருதை இந்திய அரசு அறிவித்தது. இதில் அரசியல் இருப்பதாகச் சிலர் விமர்சித்தார்கள். பாரத ரத்னாவுக்கு அவர் தகுதியானவர்தானா என்றும் சிலர் விவாதித்தார்கள். பாரத ரத்னா விருது பற்றி விவாதிக்கலாம். ஆனால் அவர் பாரதத்தின் மதிப்புமிக்க ரத்தினம் என்பதில் விவாதத்துக்கே இடமில்லை. 22 கஜங்களும் 24 ஆண்டுகளும் அதற்குச் சாட்சியாக இருக்கின்றன. எஸ்.கோபாலகிருஷ்ணன்: இளம் பத்திரிகையாளர். மின்அஞ்சல்: gopalasankar87@gmail.com சச்சினின் போதாமைகள் டெஸ்ட் போட்டிகளின் நான்காவது இன்னிங்ஸில் வெற்றியை நிர்ணயிக்கும் ஆட்டத்தை அவர் விளையாடியதில்லை என்ற விமர்சனம் சச்சின்மீது வைக்கப்படுவதுண்டு. அவருடைய முதல் சதமே நான்காவது இன்னிங்சில் இங்கிலாந்தில் அடித்ததுதான். ஆஸ்திரேலியா பெர்த் மைதானத்தில் அடித்த சதமும் நான்காவது இன்னிங்ஸ் சதம்தான். சென்னையில் 2008இல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் சச்சின் அடித்த 103 ரன்கள் இந்தியாவை வெற்றிபெறவைத்தன. பிரையன் லாரா, ரிக்கி பாண்டிங், திராவிட், லட்சுமணன் போன்றோர் அதுபோன்ற இன்னிங்ஸ்களை சச்சினை விடவும் கூடுதலாக ஆடியிருக்கிறார்கள். ஆனால் நான்காவது இன்னிங்ஸில் சச்சின் சிறப்பாக ஆடியும் பிறர் ஒத்துழைப்பு இல்லாமல் அணி தோற்றதும் உண்டு. டெஸ்ட் போட்டியில் ஒற்றை மட்டையாளரால் அணி வெற்றிபெறுவது மிக அரிதான நிகழ்வு. விவியன் ரிச்சர்ட்ஸும் ஜெஃப்ரி பாய்காட்டும் சச்சினைப் பற்றிச் சொல்வதைப் படித்தாலே சச்சினுக்கு எதிரான விமர்சனங்களின் போதாமை புரிந்துவிடும். யாருமே 100 சதவீதம் சரியாக இருக்க முடியாது என்பதையும் மனதில் கொண்டு சச்சினை மதிப்பிட வேண்டும். சச்சின் 99.5 சதவீதம் முழுமையான மட்டையாளர் என்கிறார் ரிச்சர்ட்ஸ். எல்லாவற்றையும் ஒருவரிடமே எதிர்பார்ப்பதும் அவரது மேதமைக்கான சான்று என்றுதான் சொல்ல வேண்டும் |
Labels
- MOTIVATIONAL (English) (1)
- அரசியல் (25)
- அவளுக்காக; (1)
- ஆழ்மனதின் அற்புத சக்திகள் (60)
- ஆன்மீகம் (2)
- இந்திய விவசாயியின் நிலமை (1)
- இந்தியாவின் பெருமைகள் (3)
- தன்னம்பிக்கை (3)
- தன்னம்பிக்கை கதைகள் (7)
- நகைச்சுவை (1)
- படிக்கப் பிடித்தவை (10)
- பேச்சு திறமை (2)
- மனம் எனும் அற்புத சக்தி (1)
Wednesday, December 18, 2013
சச்சின் ஒரு சகாப்தம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment