மகான்கள் காமராஜர், மொரார்ஜி தேசாய்
இன்றைக்குத் திருவாணைக்கா பாசுரம் என்கிற தலைப்பில் ஒரு அற்புதமான சொற்பொழிவினைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது, வழங்கியவர் பேராசிரியர் சிவசந்திரன். சிலந்தியும் யானையும் சிவன் மீது வைத்திருந்த பக்தியினைப் பற்றியும் சிவனைப்பற்றியும் அவனது பெருமைகளைப் பற்றியும் பேசிக்கொண்டு வந்தார். நடு நடுவே காமராஜர் மற்றும் மொரார்ஜி தேசாய் போன்ற மாபெரும் தலைவர்களின் வாழ்க்கையில் நடந்த அற்புதமான சம்பவங்களை மேற்கோள் காட்டவும் அவர் தவறவில்லை.
மொரார்ஜி தேசாய் முதலமைச்சராக இருந்த நேரம் அவரது மகள் +2 இல் ஒரு பாடத்தில் தோல்வியடைந்து விடுகிறார். மருத்துவம் படிக்கவேண்டும் என்பது அவரது திட்டம். மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தால் எப்படியும் தேர்ச்சி பெற்று விடலாம், தவறுதலாக மதிப்பெண்கள் குறைந்திருக்கலாம் என்று நினைக்கிறார். அதிகாரிகளும் அதனைப் பரிந்துரை செய்கிறார்கள். கண்டிப்புடன் மறுத்துவிடுகிறார் மாமனிதர் மொரார்ஜி தேசாய். அதற்கு அவர் சொன்ன காரணம், “என் மகள் நன்கு படிப்பவள் தான்… ஆனால் ஒரு பாடத்தில் தோற்றிருக்கும் நிலையில் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து அவள் தேர்ச்சியே பெற்றாள் எனினும்… முதலமைச்சர் மகள் அதனால் தேர்ச்சி பெறவைத்து விட்டார்கள் என்று சுலபமாகச் சொல்லிவிடுவார்கள்… அந்த வீண்பழி எனக்கு வேண்டும்… அடுத்த முறை எழுதி தேர்ச்சி பெற்றக்கொள்ளட்டும்…யாரும் இதனை மீறவேண்டாம்..” என்று உறுதிபடச் சொல்லிவிடுகிறார். அடுத்து தேர்வு எழுதித் தேர்ச்சியடைந்து மருத்துவக்கல்லூரிக்குச் செல்வதா என்கிற ஆதங்கத்தில் அவரது மகள் தற்கொலை செய்துகொள்கிறார். மொரார்ஜி தேசாய் அதற்கெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் தனது கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்து விடுகிறார்.
அடுத்து காமராஜர், அவர் ஆட்சியை இழந்த நேரம், ஒரு தொண்டர் கேட்கிறார், “ஐயா நாமளும் அதைத் தருகிறோம் இதைத் தருகிறோம்…என்று வாக்குறுதி கொடுத்திருக்கலாமே..” என்று காமராஜரைப் பார்த்துக் கேட்கிறார். “முடியாததை எப்படி சொல்லமுடியும்..?” என்று கேட்கிறார். அதற்கு அந்தத் தொண்டர், “ஐயா சும்மாவாவது..” என்று இழுத்திருக்கிறார். “அப்படி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வரவேண்டிய அவசியம் நமக்கில்லை… என்னால் அந்த மாதிரி அரசியல் பண்ண முடியாது..” என்று கறாராகச் சொல்லியவர் கிட்டத்தட்ட அதன் பிறகு அரசியலில் இருந்தே ஒதுங்கிக் கொள்கிறார்.
காமராஜரைப் பற்றிப் பேசியபோது,”அவர் ஞானிகளுக்கெல்லாம் ஞானி…யாராலும் புரிந்து கொள்ள முடியாத ஒரு பிரம்மச்சாரி… தன்னலமற்ற தலைவர்… நாம் வாழும் காலத்தில் வாழ்ந்த மகான்..” என்றார் அந்தப் பேராசிரியர்.
கண்ணுக்குப் புலப்படாத அந்தச் சிவனை விட மொரார்ஜி தேசாயும் காமராஜரும் என் மனதில் விஸ்வரூபம் எடுத்து நின்றார்கள்.
No comments:
Post a Comment