வள்ளல் எம்ஜிஆர்! 3
எம்ஜிஆர் காட்டிய மகேந்திரன்
ஒரு நாள் இரவு நேரம். கோட்டையிலிருந்து தன் வீட்டுக்கு எம்ஜிஆர் சென்று கொண்டிருந்தபோது, ஒரு இளைஞன் ஆட்டோ மீது சாய்ந்தபடி படித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தார். உதவியாளரை விட்டு விவரங்களை சேகரித்துக் கொண்டவர், ஒரு நாள் அந்த இளைஞரை வரவழைத்து விவரங்கள் கேட்டார். ஆட்டோ ஓட்டிக் கொண்டே முதுகலைப் பட்டம் படித்துக் கொண்டிருப்பதாகக் கூறியவருக்கு வேண்டிய உதவிகள் செய்தார். அவர் விரும்பிய துறையில் பணியாற்ற அறிவுரைத்தார். அவர்தான் இயக்குநர் கார்வண்ணன்.
எம்ஜிஆர் ஆதரவில் வளர்ந்து, வேலைக்குப் போய், பின்னர் எம்ஜிஆரிடமே சம்பளமும் பெற்று, அவருடைய மெகா படம் ஒன்றிற்கு திரைக்கதை – வசனம் எழுதும் வாய்ப்பு கிடைத்த ஒரு மிக முக்கியமான படைப்பாளி… தமிழ் சினிமாவுக்கே புதிய பரிமாணம் தந்த இயக்குநர் மகேந்திரன். தான் நிற்கும் எந்த மேடையிலும் எம்ஜிஆர் புகழ்பாட இவர் தயங்கியதே இல்லை.
“ஒருவேளை அவர் பார்வையில் நான் படாமலே போயிருந்தால், இந்த சினிமா துறைக்கு வந்திருப்பேனா என்பது சந்தேகம்தான். அரசியல், சினிமா எல்லாவற்றுக்கும் அப்பால், தன்னிகரில்லாத மனிதர் அவர். அவர் ஒருவரை மட்டும்தான் அப்படி அழைக்க முடியும்,” என்கிறார் மகேந்திரன்.
எம்ஜிஆரைத் தாக்கி எழுதினால் சிவாஜி சந்தோஷப்படுவார் என்ற அல்ப நினைப்பில் பல ஆண்டுகள் எம்ஜிரை மிகக் கேவலமாக தாக்கி எழுதி வந்தார் ஒரு பிரபல பத்திரிகையாளர். செய்த தவறுக்காக அந்த மனிதர் வேலையிலிருந்து நீக்கப்பட்டு, மகள் திருமணத்துக்கு பணமின்றி அத்தனை பேரிடமும் கையேந்தியபோது, வேறு சில பத்திரிகையாளர்கள் மூலம் விஷயம் கேள்விப்பட்டு, பெரும் தொகையைக் கொடுத்து திருமணம் சிறப்பாக நடக்க வைத்தவர் எம்ஜிஆர்.
No comments:
Post a Comment