Sunday, December 15, 2013

வள்ளல் எம்ஜிஆர்! -7 (வைரமுத்து )

—————————————-

ஒரே வள்ளல் எம்.ஜி.ஆர் தான் ! வைரமுத்து .
எம்.ஜி.ஆருக்கே மரணமா?
எனக்கு முதலில் மரணப்பயம் வந்தது.
காற்று – சமுத்திரம் – வானம் – எம்.ஜி.ஆர்
இவைகளெல்லாம் மரணிக்க முடியாத சமாசாரங்கள் என்று எங்கள் கிராமத்து மக்களைப் போலவே நானும் நம்பிக்கிடந்த நாட்களுண்டு.
அன்று அந்த நான்காவது நம்பிக்கை நசிந்து விட்டது.
47 முதல் 87 வரை நாற்பதாண்டு காலம் தமிழர்கள் உச்சரிக்கும் ஐம்பது வார்த்தைகளில் ஒரு வார்த்தையாய் இருந்த பெயரை மரணத்தின் மாயக்கரம் அழித்துவிட்டதா?
.ராஜாஜி மண்டபத்தில் உங்கள் இறுதிப் படுக்கையில் ரோஜா மாலைகளுக்கு மத்தியில் ஒரு ரோஜா மலையாய்க் கிடத்தப்பட்டிருந்தீர்கள். இமைக்காமல் கிடந்த உங்களை இமைக்காமல் பார்த்தேன்.
என்னால் அழ முடியவில்லை.அழுகை வரவில்லை.
மனிதல் மட்டும் சோகப் பனிமுட்டம்.
“நான் ரசித்துக் காதலித்த ராஜகுமாரா ! உனக்கா மரணம்?”என்று உதட்டுக்குத் தெரியாமல் நாக்கு உச்சரித்துக் கொண்டது.
அங்கே கூடியிருந்த அரசியல்வாதிகளில் பலர் நாளைகளைப் பற்றியே தர்க்கித்துக் கொண்டிருக்க- நானோ உங்கள் நேற்றுகளை நினைத்தே விக்கித்துக் கொண்டிருந்தேன்.
அப்பப்பா என்ன வளர்ச்சி உங்கள் வளர்ச்சி !
அயல் வீட்டுக்காரருக்கு அறிமுகமில்லாத ஒரு வாழ்க்கையோடு தொடக்கமானீர்கள்; அரசாங்க மரியாதையோடு அடக்கமானீர்கள்.
அன்று கடைசிப் படுக்கையில் உங்களைக் கண்டபோது – ஒரு சரித்திரம் சரிந்து கிடக்கிறது என்று நினைத்தேன். ஓர் அபூர்வம் முடிந்துவிட்டது என்று நினைத்தேன்.
ஒன்றன் பின் ஒன்றாய் ஞாபக மேகங்கள் …….
இருபது வயதில் என்னைத் தூங்கவிடாமல் செய்தது காதல் ;
எட்டு வயதில் என்னைத் தூங்கவிடாமல் செய்தவர் நீங்கள்.
கதைகளிலும் கனவுகளிலும் நான் கற்பனை செய்து வைத்திருந்த ராஜகுமாரன் நீங்கள் தான் என்று நினைத்தேன்.
உங்களின் இரட்டை நாடியின் பள்ளத் தாக்கில் குடியிருந்தேன்.
உங்கள் முகத்தின் மீது மீசைவைத்த நிலா என்று ஆசை வைத்தேன்.
நீங்கள் புன்னகை சிந்தும் போது நான் வழிந்தேன். வாள் வீச்சில் வசமிழந்தேன். உங்கள் பாடல்களில் நானும் ஒரு வார்த்தையுமாய் ; நானும் ஒரு வாத்தியமாய் ஆனேன்.
ஒரு தாளம் கட்டுமானத்தில் சிரிக்கும் உங்கள் சங்கீதச் சிரிப்பில் வார்த்தைகளில் பிசிறடிக்காத உங்கள் வசன உச்சரிப்பில் நான் கரைந்து போனேன்.
பெரியகுளம் ரஹீம் டாக்கீஸில் “நாடோடி மன்னன்”பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து, தூக்கத்தைத் தொலைத்துவிட்டு, சுவரில் நசுக்கப்பட்ட மூட்டைப் பூச்சிகளின் ரத்தக் கோடுகளை அந்தப் படத்தில் வரும் கயிற்றுப் பாலமாய்க் கற்பனை செய்து கொண்டு விடிய விடிய விழித்திருக்கிறேன்.
“மன்னனல்ல மார்த்தாண்டன”என்று உங்களைப் போல் மூக்கில் சைகை செய்யப் போய் சுட்டுவிரல் நகம்பட்டு சில்லி மூக்கு உடைந்திருக்கிறேன்.
பிரமிக்க மட்டுமே தெரிந்த அந்தப் பிஞ்சு வயதில் எனக்குள் கனவுகளைப் பெருகவிட்டதிலும் கற்பனைகளைத் திருகிவிட்டதிலும் உங்கள் ராஜாராணிக் கதைகளுக்குப் பெரும்பங்கு உண்டு என்பதை நான் ரகசியமாய் வைக்க விரும்பவில்லை.
நூறு சரித்திரப் புத்தகங்கள் ஏற்படுத்த முடிந்த கிளர்ச்சியை உங்கள் ஒரே ஒரு படம் எனக்குள் ஏற்படுத்தியிருக்கிறது. அந்த பாதிப்பு எனக்கு மட்டும் இல்லை. குடை பிடித்துக் கொண்டவர்களையும் எங்கோ ஓர் ஓரத்தில் நனைந்துவிடுகிற அடைமழை மாதிரி உங்களை விமர்சித்தவர்களைக் கூட ஏதேனும் ஒரு பொழுதில் நாசூக்காக நனைத்தே இருக்கிறீர்கள்.
என்ன காரணம் என்று எண்ணிப் பார்க்கிறேன். நீங்கள் மந்திரத்தால் மாங்காயோ தந்திரத்தால் தேங்காயோ தருவித்தவரில்லை. வரலாற்று ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் அகழ்ந்து பார்த்தால் மட்டுமே உங்கள் வெற்றியின் வேர்களை விளங்கிக் கொள்ள முடியும்.
இந்த மண்ணில் எங்கள் மனிதர்கள் சில நூற்றாண்டுகளாக எதை இழந்துவிட்டு நின்றார்களோ அதையே நீங்கள் தோண்டி எடுத்துத் துடைத்துக் கொடுத்தீர்கள் ; விறுவிறுப்பாய் விலைபோயிற்று.
உடலும் உயிரும் மாதிரி காதலும் வீரமும் கலந்தே விளைந்த களம் இந்தத் தமிழ் நிலம்.
காதலை ஒரு கண்ணாகவும் வீரத்தை ஒரு கண்ணாகவும் போற்றிய தமிழன், பொருளாதாரத்தை நெற்றிக் கண்ணாய் நினைக்காமல் போனான் என்பதே அவன் முறிந்து போனதற்கு மூல காரணம்.
பொருதாரச் சிந்தனைக்கே வராத தமிழன், காதலையும் வீரத்தையும் மட்டும் கோவணத்தில் முடிந்து வைத்த தங்கக் காசுகளைப் போல ரகசியமாய்க் காப்பாற்றியே வந்திருக்கிறான்.
இடைக்காலத்தில் தமிழன் அடிமைச் சகதியில் சிக்கவைக்கப்பட்டான்.
அடிக்கடி எஜமானர்கள் மாறினார்கள் என்பதைத் தவிர அவன் வாழ்க்கையில் மாற்றமே இல்லை.
அவனது வீரம் காயடிக்கப்பட்டது ; காதல் கருவறுக்கப்பட்டது.
இழந்து போன ஆனால் இழக்க விரும்பாத அந்தப் பண்புகளை வெள்ளித் திரையில் நீங்கள் வெளிச்சம் போட்ட போது இந்த நாட்டு மக்களின் தேவைகள் கனவுகளில் தீர்த்துவைக்கப்பட்டன.
வீராங்கன், உதயசூரியன், கரிகாலன், மணிவண்ணன், மாமல்லன்
என்றெல்லாம் நீங்கள் பெயர்சூட்டிக் கொண்டபோது தமிழன் தன் இறந்தகால பிம்பங்களைத் தரிசித்தான்.
நீங்கள் கட்டிப்பிடித்து கானம் படித்துக் காதலித்தபோது தமிழன் புதைந்து போன காதல் பண்பைப் புதுப்படித்துக் கொண்டான்.
மலையாள மரபுப்படித் தாயார் பெயரைத் தான் இனிஷியலாகக் கொள்வார்கள். ஆனால் நீங்களோ தமிழ் மரபுப் படி தந்தை பெயரைத்தான் இனிஷிலாகக் கொண்டீர்கள்.
நீங்கள் முதன் முதலாய் இயக்கித் தயாரித்த “நாடோடி மன்னனில்” தொடக்கப் பாடலாக “செந்தமிழே வணக்கம்” என்று தான் ஆரம்பித்தீர்கள்.
உங்களைப் பற்றி என் செவிகள் சேகரித்திருக்கும் செய்திகள் ருசியானவை.
ஒரு பாடகர் ஒரு மேடையில் உங்கள் பழைய பாடல்களைப் பாடிக் கொண்டிருக்கிறார். இரண்டு மணி நேரம் கரைந்து போன நீங்கள் இப்போது என் கைவசத்தில் இருப்பது இது மட்டும் தான் என்று உங்கள் விலையுயர்ந்த கைக்கடிகாரத்தைக் கழற்றி அந்தப் பாடகருக்குப் பரிசளிக்கிறீர்கள் ; அது உங்கள் ஈகைக்குச் சாட்சி.
நாற்பத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இறந்து போன உங்கள் இரண்டாவது மனைவியின் இல்லம் சென்றபோது படுக்கையறையின் கட்டிலைப் பார்த்துக் குலுங்கிக் குலுங்கி அழுதிருக்கிறீர்கள் ; அது உங்கள் ஈரத்திற்குச் சாட்சி.
தி.மு.க மாநாடுகளில் மாநாடு முடிந்ததும் பந்தலுக்கடியிலேயே படுத்துக்கிடக்கும் வெளியூர் மக்களுக்கு அவர்களே அறியாமல் அதிகாலைச் சிற்றுண்டிக்கு ஏற்பாடு செய்துவிட்டுப் போவீர்களே ! அது உங்கள் மனிதாபிமானத்துக்குச் சாட்சி.
பொதுக் கூட்டங்கள் முடித்துவிட்டு நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு வைகை அணைக்கு வந்து பொன்னாங்கண்ணிக் கீரை இருந்தால் சாப்பிடுவேன் என்று நீங்கள் நிபந்தனை விதிக்க, ஆளுக்கொரு திசையில் அதிகாரிகள் பறக்க, பொன்னாங்கண்ணிக் கீரை தயாராகும் வரை சாப்பிடாமல் இருந்தீர்களாமே ! அது உங்கள் உறுதிக்குச் சாட்சி.
தொலைபேசி இணைப்பகத்திலிருந்த உங்கள் ரசிகர் ஒருவர் உங்கள் குரல் கேட்க ஆசைப்பட்டு இரவு பதினொரு மணிக்கு உங்கள் வீட்டுத் தொலைபேசி சுழற்றப்படுகிற சத்தம் கேட்டு ஆசையாய் எடுத்துக் கேட்க’டொக்’என்ற அந்தச் சின்ன சத்தத்திலேயே தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது என்பது உணர்ந்து கொண்டு “யாராயிருந்தாலும் தயவு செய்து போனை வையுங்கள்” என்று உடனே உத்தரவிட்டீர்களாமே ! அது உங்கள் கூர்மைக்குச் சாட்சி.
வெளிநாட்டில் கொடுத்த பணத்தை பி.சுசீலா தமிழ்நாட்டில் திருப்பித் தரவந்தபோது “ஏன் என்னுடைய உறவை முறித்துக் கொள்ளப் பார்கிறீர்களா”? என்று உரிமையோடு மறுத்து விட்டீர்களாமே. அது உங்கள் பெருந்தன்மைக்குச் சாட்சி.
தேசிய விருது வாங்கிய பிறகு முதலமைச்சரான உங்களைச் சந்திக்காமல் கலைஞரைச் சந்தித்து வாழ்த்துப் பெறுகிறேன். கவனிக்கிறீர்கள்.
இத்தனைக்குப் பிறகும் எனக்கு இரண்டு முறை விருது தருகிறீர்கள்.
உங்கள் பெருந்தன்மை கண்டு நெகிழ்ந்து போகிறேன்.
உங்கள் வெற்றியிலிருந்து நாங்கள் கற்றுக் கொள்வதற்கு ஒன்றே ஒன்று உண்டு அது தான்-
நசிந்து போனவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவது.
உங்கள் பாடல்களெல்லாம் தமிழ்நாட்டுக்கு நீங்கள் செய்த ரத்ததானம்.
பாடலாசிரியன் முகம் கரைந்து போய் நீங்கள் மட்டுமே முகம் காட்டுவது உங்கள் பாடல்களில் மட்டும் தான்.
உங்களுக்காகப் படைக்கப்பட்ட பாடல்கள் என்னையும் படைத்திருக்கின்றன.
எனக்கு ஒரே ஓர் ஆசை மட்டும். ஆடிக்காற்றில் ஆடும் அகல் விளக்கின் சுடராய் ஆடிக் கொண்டேயிருக்கிறது.
நிகழ்விலிருக்கும் எல்லாக் கதாநாயகர்களும் என் பாடலை உச்சரித்திருக்கிறார்கள். உங்கள் உதடுகளைத் தவிர.
ஒரே ஒரு பாட்டு உங்களுக்கு நான் எழுத ஆசைப்பட்டேன்.
ஆனால்,என்னால் எழுத முடிந்தது உங்களுக்கான இரங்கல் பாட்டுதான்.
உங்களுக்கு என்னால் படைக்க முடிந்தவை – உங்கள் இறுதி ஊர்வலமான “காவியத் தலைவனுக்குக் கடைசி வரிகள்” தான்.
உங்கள் ராமாவரம் தோட்டத்திற்கு நான் முதன் முதலாய்ப் போனது உங்கள் அன்புத் துணைவியாருக்கு ஆறுதல் சொல்லத்தான்.
“உங்களைப் பற்றி முதன் முதலில் நான் பேசியது உங்கள் இரங்கல் கூட்டத்தில் தான். அன்று சொன்ன இறுதி வரியே இன்றும் என் இறுதி வரி ;
ஒரே ஒரு சந்திரன் தான் ;
ஒரே ஒரு சூரியன் தான் ;
ஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான் ;
நன்றி : வைரமுத்துவின் “இந்தக் குளத்தில் கல் எறிந்தவர்கள்” நூலிலிருந்து.

No comments:

Post a Comment