இந்தியாவின் சொத்து ஜீவா
தாங்கொண்ட கொள்கை தழைக்கப் பெரிதுழைப்பார்
தீங்கு வரக்கண்டு சிரித்திடுவார் - யாங்காணோம்
துன்பச் சுமைதாங்கி சீவானந்தம் போன்ற
அன்புச் சுமை தாங்கும் ஆள்.
- பாவேந்தர் பாரதிதாசன்
ஜீவா 1907 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் நாள் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பூதப்பாண்டி என்ற கிராமத்தில் பட்டன்பிள்ளை என்பவருக்கும், உமையம்மாளுக்கும் நான்காவது பிள்ளையாகப் பிறந்தார்.
நாடு முழுவதும் பற்றிப் படர்ந்த சுதந்திரப் போராட்டம், திருவிதாங்கூர் சமஸ்தானத்தையும் விட்டுவைக்கவில்லை. நாஞ்சில் நாட்டிலும் பல இடங்களிலும் அந்நிய துணிப் புறக்கணிப்புப் போராட்டங்கள் நடைபெற்றன. பூதப்பாண்டிக்கு அருகில் உள்ள திட்டுவினை என்கிற ஊரில் திரிகூடசுந்தரம் பிள்ளை தலைமையில் நடைபெற்ற அந்நிய ஆடை புறக்கணிப்பு கூட்டம் ஜீவாவின் வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. அந்தக் கூட்டத்தின் இறுதியில் அந்நியத் துணிகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. கூட்டத்துக்குச் சென்றிருந்த ஜீவானந்தம், தான் அணிந்திருந்த அந்நிய ஆடைகளை தீயில் வீசிவிட்டு கோவணத்துடன் வீடு திரும்பினார். அந்த நாள் முதல் ஜீவா கதர் ஆடையையே அணியலானார். அவரது இறுதிக் காலம் வரையில் ஜீவாவின் உடலைக் கதர் ஆடையே அலங்கரித்தது.
நாஞ்சில் நாட்டுப் பகுதிகளில் கோவில் விழாத் தொடங்கியதும் ஊரின்; நான்கு முக்கிய வீதிகளிலும் ‘தெருமறிச்சான்’ என்ற தடுப்பு வைக்கப்படும். திருவிழா முடியும் வரையில் தீண்டப்படாதவர்களும், தாழ்ந்த சாதிக் காரர்களும் தெருமறிச்சானைத் தாண்டி கோவில் பக்கம் போய் விடக்கூடாது. இப்படிப்பட்ட சு{ழ்நிலையில் ஜீவானந்தம், தனது இளமைப்பருவத்திலேயே தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த தனது நண்பரான மண்ணாடி மாணிக்கம் என்பவரை ‘தெருமறிச்சானை’த் தாண்டி ஊருக்குள்ளும், கோயிலுக்குள்ளும் அழைத்துச் சென்றார். ஊராரின் எதிர்ப்பையும் பொருட்படுத்தவில்லை ஜீவா. இந்த வகையில் அவர் நாஞ்சில் நாட்டு ஆலயப்பிரவேசப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவர் என்று கூறலாம். தமிழக வரலாற்றில் தீண்டாமை ஒழிப்பிற்காக வீட்டை விட்டு வெளியேறிய முதல் சமூக சீர்திருத்தவாதியாவார் ஜீவா.
ஜீவானந்தம் வீட்டை விட்டு வெளியேறிய காலத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தீர்மானத்திற்கேற்ப 1924 ஆம் ஆண்டில் தந்தை பெரியார் தலைமையில் கேரளத்தில் வைதீகக் கோட்டையாக இருந்த வைக்கம் நகரில் தீண்டாமை எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் இந்தியா முழுவதிலும் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதரத் தொண்டர்களைப் போலவே, ஜீவாவும் பல தொல்லைகளுக்கு ஆளாக வேண்டியிருந்தது. இத்தோடு ஜீவாவின் பள்ளிப்படிப்பு முற்று பெற்றது.
சுசீந்திரம் தாணுமலையான் ஆலய நுழைவுப்போராட்டம் மேல் சாதிக்காரர்களின் கடுமையான எதிர்ப்பையும், தாக்குதலையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. போராட்டத்தில் பங்கு பெற்றவர்கள் அவமதிக்கப்பட்டனர். ஜீவா கடுமையாகத் தாக்கப்பட்டார். இதையெல்லாம் பொருட்படுத்தாமல் “வழிவிடுவீர்ஸ வழிவிடுவீர்ஸா’ என்று தான் எழுதிய பாடலைப் பாடிக்கொண்டு கோவிலுக்குள் நுழைந்தார். இந்தப் போராட்டத்தின் போது, ஜீவா கடுமையாகத் தாக்கப்பட்டதால், உடம்பில் ஏற்பட்ட காயம் விழுப்புண்ணாக நீடித்தது.
வாயற்ற நாய் கழுதை மலம் தின்னும்
பன்றியும் வழியோடு செல்லலாமாம்
மனிதர்கள் நாம் சென்றிடில் புனிதமற்றுத்தீட்டு
வந்துலகு முழுகிப் போமாம்.
என்று தீண்டாமைக் கொடுமையை சாடுவதுடன், மனிதர்கள் ஏற்றத்தாழ்வின்றி சரிசமமாக வாழவேண்டும் என்பதை வலியுறுத்துகிறார் ஜீவா.
நெல்லை மாவட்டம், சேரன்மாதேவியில் வ.வே.சு அய்யர் நடத்திய குருகுலத்தில் பார்ப்பன மாணவர்களுக்குத் தனியாகவும்,இதர சாதி மாணவர்களுக்குத் தனியாகவும் உணவு பரிமாறப்பட்டது. இந்தக் குருகுலம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின்; உதவியோடு நடத்தப்பட்டது. வர்ணாசிரம முறைப்படி மாணவர்களுக்கு தனித்தனியாக உணவளிப்பதை அறிந்து,தந்தை பெரியார் நேரில் சென்று உண்மையைக் கண்டறிந்தார். இந்த அநியாயத்தை கண்டித்து, எதிர்த்து பெரியார் காங்கிரஸ் கட்சிக்குள் போராட்டம் நடத்தினார். ஜீவாவும் பெரியாருடன் இந்தப் போராட்டத்தில் பங்கு பெற்றார். காந்தியின் சமரசம் பெரியாரை ஆத்திரமடையச் செய்தது. ஜீவா இந்த அக்கிரமத்தை எதிர்த்து குருகுலத்தை விட்டு வெளியேறினார். பின்பு, காரைக்குடி சென்று சிராவயல் கிராமத்தில் ஆசிரமத்தை நிறுவினார். இந்த ஆசிரமம் காந்திய நிர்மானத் திட்டத்தை லட்சியமாகக் கொண்டிருந்தது. பல கிராமங்களில் தாழ்த்ப்பட்ட மக்கள் மத்தியில் கல்விப்பணி செய்யப்பட்டதோடு, நூல் நூற்பு நிலையங்களும் தோற்றுவிக்கப்பட்டன. இந்த ஆசிரமத்தில் தாழ்த்தப்பட்ட மாணவர்களோடு பெண்களும் சரி நிகர் சமானமாகப் பாவிக்கப்பட்டனர்.
தமிழ் மொழியின் மீது ஜீவா கொண்ட பற்றும், வடமொழி எதிர்ப்பும் தனது பெயரை ‘உயிர் இன்பன்’ என மாற்ற வைத்தது. ஜீவா, காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டுக் கொண்டிருந்த அதே சமயத்தில் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திலும் தீவிரமாகப் பங்கு கொண்டிருந்தார்.
‘பெண்களும் - விடுதலையும்’ என்னும் பொருளில் ஜீவா உணர்ச்சி கொப்பளிக்க ஆற்றிய சொற்பொழிவைக் கேட்டு வியந்து போன வ.உ.சி , “அஞ்சுபவர்களும், கெஞ்சுபவர்களும் சுதந்திரத்தைப் பெற முடியாது. ஜீவானந்தம் போன்ற சிலர் இருந்தாலே போதும் நாடு விடுதலை பெற்றுவிடும்” என்று கூறிப் பாராட்டினார்.
1927 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த காந்தியடிகள், ஜீவா நடத்திக் கொண்டிருந்த ஆசிரமத்துக்கு வந்தார். ஜீவா தன் கையால் நூற்ற பத்தாயிரம் கெஜம் நூலை அவருக்குப் பரிசாக கொடுத்தார். நூலைப் பெற்றுக் கொண்ட மகாத்மா காந்தி ஜீவாவிடம் உங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்று கேட்டார். ‘இந்தியா தான் என் சொத்து’ என்று பதில் சொன்னார். மாக்மா காந்தி ,“இல்லை, இல்லை நீங்கள் தான் இந்தியாவின் சொத்து” என்று ஜீவாவின் தேச பக்த உணர்வைப் பாராட்டினார்.
வருணாசிரம கொள்கைப் பற்றி காந்தியிடம் ஜீவா கேள்வி கேட்டார். “குணத்திற்கும் தர்மத்திற்கும் தக்க படி நான்கு வர்ணங்களை நான் சிருஷ்டித்திருக்கிறேன் என்று கீதையின் வாக்கியங்களில் தங்களுக்கு உடன்பாடு உண்டல்லவா” என்று ஜீவா கேட்டபோது காந்தியடிகள் “ஆம்” என்று பதில் சொன்னார்.
“அப்படியானால், சாத்வீகத்தன்மையிலும், நல்நெறி ஒழுக்கத்திலும் சிறந்தவராக விளங்கும் நீங்களும் ஒரு பார்ப்பனர் அல்லவா” பிரமாணனாகப் பிறந்து தீய ஒழுக்கமுடையவன் சு{த்திரன் தானே” என்று ஜீவா கேட்ட போது “இல்லை” என்று மறுத்த காந்தி “நான் ஒரு நல்ல வைசியன் தீய ஓழுக்கமுடைய ஒரு பார்ப்பனன் கெட்ட பார்ப்பனன்” என்று பதில் சொன்ன போது, காந்தியின் கருத்துக்கள், பிற்போக்கானவை, சனாதனத் தன்மை கொண்டவை, வைதீகக் கருத்துக்கள், முற்போக்குப் பார்வை கொண்டதல்ல என்று தெரிந்ததும் ஜீவா மேற்கொண்டு விவாதத்ததைத் தொடரவில்லை.
காரைக்குடி அருகில் உள்ள கோப்பை நாயக்கன் கோவிலில் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழையக் கூடாது என்பதற்கு எதிராக ஜீவா போராட்டம் நடத்தினார். உள்ளூர் வைதீகர்களது கோபத்துக்கு உள்ளாகி கத்திக்குத்துக்கு உள்ளானார். ஜீவாவின், தீவிர அரசியலையும், சுயமரியாதையுப் போக்கையும் பிடிக்காத ஆசிரமத் தலைவர் கும்பலிங்கபிள்ளைக்கும் ஜீவாவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே, ஆசிரமத்தில் இருந்து பிரிந்து சிராவயல் அருகிலேயே 1929 ஆம் ஆண்டு நாச்சியார்புரம் என்ற கிராமத்தில் “உண்மை விளக்க நிலையம்” என்ற பெயரில் ஓரு ஆசிரமத்தை தோற்றுவித்தார். ஆசிரமத்தின் உயரிய நோக்கங்கள்.
1)வறுமை, பிணி அகற்றுதல் 2) தீண்டாமை ஒழித்தல் 3) மதுப்பழக்கம் ஒழித்தல் 4) ஆதி திராவிட மக்களுக்கு உழைத்தல் 5) பெண்ணுரிமை பேணல் 6) குருட்டுப் பழக்க வழக்கங்களை ஒழித்தல்.
1930 ஆம் ஆண்டு ஈரோட்டில் நடைபெற்ற இரண்டாவது சுயமரியாதை மாநாட்டில் ஜீவா கலந்து கொண்டு, ஞசாதி, மத விவகாரங்களில் மட்டும் நமது சுயமரியாதையை பாதுகாத்துக் கொண்டால்; போதாது. அரசியல் விவகாரங்களிலும் நாம் நமது சுயமரியாதையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.’ என்று சுயமரியாதை இயக்கத்தையும், தேச விடுதலை இயக்கத்தையும் இணைத்துப் பேசினார்.
1931 ஆம் ஆண்டு விருது நகரில் நடைபெற்ற மூன்றாவது சுயமரியாதை மாநாட்டில் ஜீவா கலந்து கொண்டு, ‘சமதர்ம தத்துவமும், பொதுவுடைமைக் கொள்கையும் நாட்டில் ஓங்க வேண்டும் என்பதே நமது லட்சியமாக இருக்கிறபடியால் விதி, கடவுள்செயல் என்பன போன்ற எண்ணங்கள் மக்கள் மனதிலிருந்து ஒழிக்கப்பட்ட வேண்டும்?” என்ற தீர்மானத்தைக் கொண்டுவந்தார்.
பெரியாரது சுயமரியாதை இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த ஜீவா, தேச விடுதலைப் போராட்டத்திலும், அதே வேகத்துடனும், வீறுடனும் ஈடுபட்டார். 1932 ஆம் ஆண்டு சட்டமறுப்பு இயக்கம் தீவிரமடைந்த போது காரைக்குடியில் ஜீவா தலைமையில் போராட்டக் குழு அமைக்கப்பட்டது. சட்ட மறுப்பு இயக்க ஆதரவுக் கூட்டங்களில் ஜீவாவின் சொல்வன்மை மக்களை ஆவேசம் கொள்ள வைத்தது. மிரண்டு போன அரசு 07.01.1932 அன்று ஜீவா காரைக்குடிக் கூட்டத்தில் சொற்பொழிவாற்றினார். பிரிட்டிஷ் அரசு மறுதினம் முதல் அவர் எங்கும் பேசக் கூடாது என்று வாய்ப்பூட்டுப் போட்டது. ஜீவா, அதை மீறினார். மறு நாள் கோட்டையூரில், தடையை மீறிப் பேசிய போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதுவே ஜீவாவின் முதல் சிறைவாசம். இந்தச் சிறைவாசம் ஜீவாவின் அரசியல் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
சிறையிலிருந்த பொழுது மாவீரன் பகத்சிங்கின் தோழர்களான யோகேஸ்வரதத், குந்தலால் ஆகியோரையும், வங்கப் புரட்சியாளர்களான ஜீவன்லால் கோஷ், சட்டர்ஜீ ஆகியவர்களையும் சந்தித்தார். சோசலிசம், கம்யூனிசம் போன்ற தத்துவங்கள் பற்றியும், சோவியத் யூனியன் பற்றியும் தெரிந்து கொண்டார். பொதுவுடைமை நூல்களையும் படித்தார். 1932 சனவரியில் காங்கிரஸ்;காரனாகச் சிறைபுகுந்த ஜீவா நவம்பரில் பொதுவுடைமைவாதியாக வெளியே வந்தார்.
பொதுவுடைமைக் கோட்பாட்டின்பால் ஈர்க்கப்பட்டிருந்த தந்தை பெரியார் நடத்திய விடுதலை ஏட்டில் பொதுவுடைமைத் தலைவர் சிந்தனை சிற்பி சிங்கார வேலர், ஜீவா ஆகியவர்களின் கட்டுரைகள் வெளியாகிக் கொண்டுடிருந்தன.
1932 ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவிற்கு பயணம் செய்து திரும்பிய பெரியார், சுயமரியாதை இயக்க ஊழியர் கூட்டத்தைக் கூட்டினார். இந்தக் கூட்டத்தில் ஜீவாவும் கலந்து கொண்டார். சுயமரியாதை இயக்கத்தின் அரசியல் பிரிவாக “சமதர்ம கட்சி” என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அது “ஈரோட்டுப் பாதை” என்று அழைக்கப்பட்டது. இந்தக் கூட்;டம் பொதுவுடைமை இயக்கத்தின் முன்னோடியான தோழர். சிங்காரவேலர் தலைமையில் நடைபெற்றது. ஜீவாவும் கலந்து கொண்டார். ஜீவாவுக்கு சிங்காரவேலருடன் தொடர்பு ஏற்பட்டது. அதன் மூலம் விஞ்ஞான சோசலிசம், கம்யூனிசம், நாத்திகம் ஆகியவற்றைப் பற்றி புரிந்து கொள்ள வாயப்பு ஏற்பட்டதுடன், சிங்காரவேலாpடமிருந்து கம்யூனிச நூல்களை பெற்று படிப்பதற்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஈரோடுத் திட்டத்தின் அடிப்படையில் தமிழ் நாடெங்கும் தீவிரப் பிரச்சாரத்தில் பெரியார் இறங்கினார். முதலாளித்துவ ஒழிப்பு மாநாடு, ஜமீன் ஒழிப்பு மாநாடு, லேவாதேவிக்காரர் வட்டிச் சுரண்டல் ஒழிப்பு மாநாடு என்று பல மாநாடுகள் தமிழகமெங்கும் நடைபெற்றது. இந்த மாநாடுகளில் ஜீவா கலந்து கொண்டு முழங்கினார்.
1933 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், சென்னை எழும்பூர் ஒயிட்ஸ் மெமோரியில் மண்டபத்தில் தந்தை பெரியார், தோழர் சிங்காரவேலர், ஜீவா ஆகியோர் பங்கு பெற்ற நாத்திகர்கள் மாநாடு நடைபெற்றது.
1928 ஆம் ஆண்டு மீரட் சதி வழக்கு நடைபெற்றது. பொதுவுடைமை வாதிகள் மீது பிரிட்டிஷ் அரசால் போடப்பட்ட வழக்கின் மீது 1933 சனவரி மாதத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பு மிகவும் கொூரமானது. மனிதாபிமானமற்ற முறையில் அளிக்கப்பட்டது என உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி டாக்டர் ஐன்ஸ்டீன், உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரான ரோமைன் ரோலன்ட் ஆகியோர்கள் வன்மையாகக் கண்டித்தனர்.
மாவீரன் பகத்சிங் தான் தூக்கிலிடப்படுவதற்கு முன்பாக எழுதிய “நான் ஏன் நாத்திகன் ஆனேன்” என்ற கட்டுரையை ஜீவா தமிழாக்கம் செய்தார். அதை தந்தைபெரியார் பதிப்பித்து வெளியிட்டார். அந்தக் கட்டுரையை வெளியிட்டதற்காக வெள்ளை ஏகாதிபத்தியம், பெரியாருக்கும், அவரது சகோதரர் கிருஷ்ணசாமிக்கும், மொழி பெயர்ப்பாளர் ஜீவாவுக்கும் சிறைத் தண்டனை விதித்தது. பிரிட்டிஷ் அரசால் தண்டிக்கப்பட்ட ஜீவா, கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து சிறைச் சாலைகளிலும் மாறி மாறி அடைக்கப்பட்டு ,அலைக்கழிக்கப்பட்டு, அவமதிக்கப்பட்டார். தமிழக வரலாற்றில் மொழிபெயர்ப்பு செய்தமைக்காக முதன்முதலாக சிறைபிடிக்கப்பட்டவர் ஜீவாவாகத் தானிருக்க வேண்டும்.
1934-ஆம் ஆண்டு புரட்சி ஏட்டில் காந்தியை ஏன் புறக்கணிக்க வேண்டும் என்று அறைகூவல் விட்டார். காரணங்களாவன, காந்தி வர்ணாசிரமத்தை ஒப்புக் கொண்டார்.காந்தி முதலாளித்துவத்தை அழிக்க விரும்பவில்லை. தொழிலாளர்களுக்கும், முதலாளிகளுக்கும் இடையில் சமரசம் ஏற்படுவதையே விரும்பினார். தீண்டாமை ஒழிப்பு, சுயதேவை பூர்த்தி ஆகிய காந்தியின் கருத்துக்கள் சாரமற்றவை.
1934 ஆம் ஆண்டு சனவரியில் புரட்சி ஏட்டில் நாத்திகப் பிரச்சாரம், குட்டி முதலாளித்துவமும், செவிட்டு அரசும் ஆகிய கட்டுரைகளை எழுதினார். அக்கட்டுரைகள் ஆட்சேபகரமானது என்று அரசு நடவடிக்கை எடுத்தது. புரட்சி ஏடு நிறுத்தப்பட்டது.
1935 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம் தேதியன்று ‘சுயமரியாதை சமதர்மக் கட்சி’ யின் மாநாடு நடைபெற்றது. அக்கட்சியின் கொள்கைகளாவன குருட்டு நம்பிக்கைகளுக்கு எதிராகவும், மத நம்பிக்கைகளுக்கு எதிராகவும், அர்த்தமற்ற சடங்குகளுக்கு எதிராகவும், மக்களிடம் பெரும் சமூக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்றாலும் இத்தகைய அர்த்தமற்ற சடங்குகளும், மரபுவழி நம்பிக்கைகளும் மக்கள் மனங்களில் இன்னும் ஆழமாக வேரூன்றியுள்ளன. அவற்றைச் சட்டத்தின் மூலம் அல்லாமல் வேறு வழியில் மாற்ற இயலாது. அரசு நிர்வாகமும் ,அமைப்புகளும் ஏழைகளையும் ,உழைக்கும் மக்களையும் ஒடுக்குவதற்கே பயன்படுத்தப்படுகிறது. சாதியப் பாகுபாடுகளை ஒழிப்பதற்குரிய எந்த நடவடிக்கையும் எடுக்க வட்ட மேஜை மாநாடு தவறி விட்டது.
சுயமரியாதை சமதர்மக் கட்சி ஆரம்பித்து பிரச்சாரம் செய்த போது பொதுவுடைமைவாதிகள் ஜீவாவை தொடர்பு கொண்டார்கள். காங்கிரஸ்-சோசலிஸ்ட் கட்சியில் ஜீவா சேர்ந்தார்.
1935 ஆம் ஆண்டு சென்னை மாநிலத் தொழிற்சங்க காங்கிரஸ் அமைப்பில் ஜீவா தலைவராகவும், சுந்தரய்யா செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சென்னை அச்சுத் தொழிலாளர் சங்கத்தைத் தொடங்கினார். அச்சங்கத்தின் தலைவரானார் ஜீவா.
காங்கிரஸ் கட்சியானது. தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்று, குற்ற பரம்பரைச் சட்ட ஒழிப்பு என்பதாகும். அதாவது குற்ற பரம்பரைச் சட்டத்தின்படி முக்குலத்தோர் இனத்தைச் சேர்ந்த வயது வந்த ஆண்கள் யாரும் இரவில் வீட்டில் தங்கக் கூடாது. அவர்கள் ஊர் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் இரவுப் பொழுதைக் கழிக்க வேண்டும். மறுத்தால் தண்டனைக்குள்ளாக வேண்டும். காவல் நிலையத்தில் ஆஜரானார்கள் என்பதற்காக காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கும் பதிவேட்டில் அவர்கள் ரேகை வைக்க வேண்டும். எனவே, மக்கள் இந்தச் சட்டத்தை ‘ரேகைச் சட்டம்’ என்று அழைத்தனர். மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்களில் வாழும் முக்குலத்தோரைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு கொடுமையான சட்டத்தை வெள்ளைக்கார அரசாங்கம் நடைமுறைப் படுத்தயிருந்தது.
காங்கிரஸ் கட்சி 1937 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும், ரேகைச் சட்டத்தை ரத்து செய்ய மறுத்தது. ரேகைச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஜீவா, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் பி.இராமமூர்த்தி ஆகியவர்கள் காங்கிரஸ் கமிட்டியின் பல கூட்டங்களிலும் வாதாடிப் பார்த்தார்கள். காங்கிரஸ் கமிட்டி சிபாரிசு செய்தும்,ராஜாஜீ ரத்து செய்ய மறுத்துவிட்டார். இச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென மதுரை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பல மாநாடுகளும், பேரணிகளும் நடத்தப்பட்டது. வெகு மக்களின் போராட்டம் வெடிக்கும் நிலை ஏற்பட்டது. அடுத்து கூடிய சட்டசபைக் கூட்டத்தில் ரேகைச் சட்டம் ரத்து செய்யப்பட்டது.
1928 ஆம் ஆண்டு நடைபெற்ற தென்னிந்திய ரெயில்வே போராட்டத்திற்கு ஜீவா புத்துயிர் ஊட்டினார். 1937 ஆம் ஆண்டு திருநெல்வேலி விக்கிரமசிங்கபுரம் ஆலைத் தொழிலாளர் போராட்டத்தை ஜீவா முன்னின்று நடத்தினார். சென்னையில் மட்டுமல்ல, தமிழகத்தின் இதரப் பகுதிகளிலும் தொழிற்சங்கங்களை அமைப்பதிலும், தொழிலாளர்களை ஒன்றுபடுத்துவதிலும் ஜீவா முன்னின்று முனைப்புடன் செயல்பட்டார். 1937 ஆம் ஆண்டு மதுரை பசுமலையில் உள்ள மகாலெட்சுமி மில்லில் தொழிற்சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. தொழிலாளர்கள் சங்கத்தின் மூலம் போராடினார்கள். ரூhர்வி மில் போராட்டத்திற்கு ஜீவா தலைமை தாங்கி நடத்தினார். போராட்டத்தில் ஜீவா தாக்கப்பட்டார்.
1937 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதி ஜீவா அவர்களை ஆசிரியராகக் கொண்டு ஜனசக்தி இதழ் வெளிவந்தது.
1939 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், கடலூரில் நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் ,ஜீவா மீது தொழிலாளர்கள் போராட்டங்களை நடத்தியதற்காக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனவே, ஜீவா காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறினார்.
1939 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இரண்டாவது உலகயுத்தம் ஆரம்பமாயிற்று. அந்த யுத்தத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு கடுமையாக எதிர்;க்க வேண்டுமென அறைகூவல் விடுத்தது. கம்யூனிஸ்ட் கட்சியின் அறைகூவலை ஏற்று லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர். நாடெங்கும் யுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும், வேலை நிறுத்தங்களும், போராட்டங்களும் நடைபெற்றன. யுத்த எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் பிரிட்டிஷ் அரசு 1939 ஆம் ஆண்டு அக்டோபர் 28 ஆம் தேதி ஜீவாவை கைது செய்தது. இரண்டரை மாதச் சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார். மீண்டும் தமிழகமெங்கும் யுத்த எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரிட்டிஷ் அரசு ஜீவாவை சென்னை மாகாணத்தை விட்டு வெளியேற வேண்டும் என நிர்ப்பந்தம் செய்தது. கம்யூனிஸ்ட்கள் மீது அடக்கு முறையை ஏவி விட்டது. ஜீவா தலைமறைவானார்.
1946 ஆம் ஆண்டு நடைபெற்ற கப்பற்படை எழுச்சிப் போராட்டத்திற்கு ஆதரவாகக் கம்யூனிஸ்ட் கட்சி அறை கூவல் விடுத்தது. நாடெங்கும் வேலை நிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பிப்ரவரி 23 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற தொழிலாளர்களின் ஊர்வலத்துக்கு ஜீவா தலைமை தாங்கினார். ஊர்வலம் சென்னை பிக்ஷ சி மில்லுக்கு அருகாமையில் சென்று கொண்டிருந்தது. காவலர் படை ஊர்வலத்தை தடுத்தது. மேற்கொண்டு ஊர்வலம் சென்றால் துப்பாக்கியால் சுடுவோம் என்று எச்சரித்தது. அப்போது வீராவேசத்துடன் ‘சுடு’ என்று தனது மார்பைத் திறந்து காட்டி ஜீவா முன்னேறவும் ஊர்வலம் தொடர்ந்து சென்றது. காவலர் படை பின் வாங்கியது.
ஜீவா தனது தலை மறைவு வாழ்க்கையின் போது சென்னை மாநகரத்தையே அதிர வைத்த மாநகராட்சித் தொழிலாளர்கள் போராட்டம் 18 நாட்கள் நடைபெற்றது. அப்போராட்டத்திற்கு வழிகாட்டியவர் ஜீவா.
1947 ஆம் ஆண்டு தோழர். பத்மாவதியைக் கலப்புத் திருமணம் செய்து கொண்டார் ஜீவா. திருமணத்துக்குப் பின் அவர்களுடைய குடும்ப வாழ்க்கை சென்னை தாம்பரம் பகுதியில், புறம்போக்கு நிலத்தில் குடிசைவாழ் மக்கள் வாழ்ந்த பகுதியில் நடைபெற்றது. ஜீவா தனது இறுதிக்காலம் வரையில் இந்தக் குடிசையில் தான் வாழ்ந்து வந்தார்.
1948 ஆம் ஆண்டு கட்சி சட்ட விரோதமாக்கப்பட்டது. கம்யூனிஸ்ட்டுகள் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். கட்சியின் ஆணைப்படி ஜீவா தலை மறைவானார். ஜீவா இலங்கைக்கு மாற்றுப் பெயரோடு சென்றார். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டாக்டர் விக்கிரம் சிங்காவின் வீட்டில் தங்கினார். தமிழ்ச் சங்கக் கூட்டத்தில் சொற்பொழிவாற்றினார். இலங்கை முழுவதும் சென்று தமிழ் இலக்கியம், இந்திய- இலங்கை உறவு குறித்து சொற்பொழிவாற்றினார். இலங்கையிலிருந்த பொழுது “சோசலிஸ்ட் தத்துவங்கள்” என்ற நூலை எழுதினார். ஒரு ஆண்டுக்குப் பிறகு தமிழகம் திரும்பினார்.
தலைமறைவு வாழ்க்கையிலிருந்து கொண்டே கேரளத்தில் இருந்து தேவிகுளம், பீர்மேடு ஆகிய தமிழர் வாழும் பகுதியை தமிழ் நாட்டுடன் இணைக்க வேண்டும் என்றப் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டினார். திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்புக்கு ஆதரவு திரட்டினார். 1949 ஆம் ஆண்டு ஜீவா கைது செய்யப்பட்டுப் பாதுகாப்புக் கைதியாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
15.02.1950 அன்று சேலம் சிறைச் சாலையில் 22 கம்யூனிஸ்ட்டு கைதிகள் காங்கிரஸ் அரசால் அநியாயமாக, கொடு்ரமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். 100 பேர் படுகாயம் அடைந்தனர். இந்தப் படுகொலையைக் கண்டித்து அறிக்கை விடுத்ததுமல்லாமல், ஆர்ப்பாட்டமும் நடத்திய ஒரே தமிழகத் தலைவர் தந்தை பெரியார் ஈ.வெ.ரா மட்டுமே தான், மற்றத் தலைவர்களும், கட்சிக் காரர்களும் வாய்மூடி மௌனிகளாக வேடிக்கைப் பார்த்து நின்றார்கள்.
1952 ஆம் ஆண்டு சென்னை சட்டசபைக்கான பொதுத் தேர்தல் நடைபெற்றது. ஜீவா, வட சென்னைத் தொகுதியிலிருந்து கம்யூனிஸ்ட் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டமன்ற உறுப்பினாரகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜீவா, சட்டமன்றத்தில் தமிழிலேயே பேசினார்.
குலக்கல்வித் திட்டத்தை அமுல்படுத்தி ராஜாஜீ ஜனநாயக மரபை மீறிவிட்டார். மேலும் பெற்றோரின் தொழில்களைக் கற்பது என்பது வளரும் தலைமுறையினரை சாதிய கட்டுக்குள் மீண்டும் அடைத்து, வர்ணாசிரமப் பிரிவுச் சுவர்களை உடைக்கவிடாமல் பாதுகாக்கும் முயற்சியாகும் என்றும், இது சமூக சமத்துவம் என்ற அரசியல் சட்டத்திற்கு முரணானது என்றும் சட்டமன்றத்தில் வாதாடினார் ஜீவா. கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் உழைப்பாளர் கட்சி, பிரஜா சோசலிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளின் கடுமையான எதிர்ப்பின் மூலம் குலக்கல்வித் திட்டம் சட்டமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது.
சட்டமன்றத்தில் ஜீவா மதுவிலக்குச் சட்டம், தொழிலாளர்கள் நலச் சட்டம், பண்ணையாட்கள் பாதுகாப்புச் சட்டம், விபச்சாரத் தடைச்சட்டம் போன்ற சட்டங்கள் இயற்றப்பட குரல் கொடுத்தார்.
ஜீவா பிறந்த மண்ணான, நாஞ்சில் நாட்டைத் தமிழ்நாட்டுடன் இணைப்பதற்காக நடைபெற்ற போராட்டத்தில் ஜீவாவின் பங்கு குறிப்பிடத்தக்கது. 1949 ஆம் ஆண்டு அப்போதைய கேரள அரசு, தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான கோரிக்கைகளைக் கொடுக்க மறுத்தது. எனவே, தமிழப் பகுதிகளில் தனிநபர் சத்தியாகிரகம் நடைபெற்றது. ஆனால், திருவிதாங்கூர் அரசோ காவல் துறை முலம் போராட்டத்தை அடக்கியது. விளவங்கோடு தாலுகாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சு{ட்டில் இரண்டு பேர் மரணம் அடைந்தனர்.
1954 ஆகஸ்ட் 11 ஆம் தேதி விடுதலை தினமாக தமிழ் பகுதிகளில் கொண்டாடப்பட்டது. பட்டம் தாணுப்பிள்ளை அரசு நடத்திய துப்பாக்கிச் சு{ட்டில் 11 பேர் மரணமடைந்தனர். இந்தக் கொடுமையை எதிர்த்து ஜீவா நாஞ்சில் நாட்டிலேயே கண்டனக் கூட்டங்கள் நடத்தினார்.
தமிழ் மக்கள் பெரும்பாலும் வாழ்ந்து வந்த தேவிகுளம்-பீர்மேடு ஆகிய மேற்கு மாகாணப்பகுதிகள், சித்தூர் நெய்யாற்றின் கரை, செங்கோட்டை மேல் பாகம் ஆகிய பகுதிகள் கேரளத்துடன் இருக்க வேண்டும் என்ற அரசின் முடிவை எதிர்த்து பிப்ரவரி 2 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. ஊர்வலத்தில் காவல்துறையினர் தடியடிப்பிரயோகம் செய்தனர். அதில் ஜீவாவும், எம்.ஆர். வெங்கட்ராமனும் படுகாயம் அடைந்தனர். ஜீவா தனது அரசியல் வாழ்வில் ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு மேல் சிறையிலும், காவல்துறை பாதுகாப்பிலும் கழித்தார்.
1955 ஆம் ஆண்டு ஜீவா சென்னைப் பல்கலைக் கழகத்தின் செனட் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழ் நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, தனது கொள்கை, கோட்பாடு அடிப்படையில் ஒரு இலக்கிய அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் 1959 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இலக்கிய இதழாக ‘தாமரை’ ஏடு வெளியிடப்பட்டது. ஜீவா இறக்கும்வரை அதன் ஆசிரியராக விளங்கினார்.
முற்போக்குப் படைப்பாளிகளையும், கலைஹர்களையும் ஒன்றுபடுத்தி தமிழகம் தழுவிய அளவில் 1961 ஆம் ஆண்டு மே மாதம் “தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்” என்ற அமைப்பை ஏற்படுத்தினார்.
ஜீவா எழுதிய நூல்கள்: 1) பாரதியைப் பற்றி 2) மொழியைப் பற்றி 3) புதுமைப் பெண் 4) மதமும் மனித வாழ்வும் 5) கலையும் இலக்கியமும் 6) சங்க இலக்கியத்தில் சமுதாய காட்சிகள் 7) ஜீவாவின் பாடல்கள் 8) சோசலிஸ்ட் தத்துவங்கள் 9) இலக்கியத்தில் சோசலிச யதார்த்தவாதம் 10) கம்பன் கண்ட தமிழகம் 11) கம்பனும் பாரதியும் 12) இலக்கியச் சுவை 13) பாரதி பாடல்கள் 14) பாரதியின் தத்துவ ஞானம் மற்றும் பழமொழிகளையும், வழக்குச் சொல் குறித்த அகராதியையும் தொகுத்து அளித்துள்ளார்.
ஆண்களைவிடப் பெண்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம் களையப்பட வேண்டும். சமூக, அரசியல், பொருளாதாரம், தொழில்நுட்பம், கலாச்சாரம் ஆகிய அனைத்துத்துறைகளிலிலும் ஆண்களும் பெண்களும் சரிசமமாக நடத்தப்பட வேண்டும். ஆண்கள் அயோக்கியர்களாக இருக்கும் வரை பெண்கள் எப்படி கற்புக்கரசிகளாக இருக்க முடியும் என்பதை ஆண்கள் நினைத்துப் பார்ப்பதில்லை. ஆனால், தங்கள் மனைவியர் மட்டும் கற்புக்கரசியாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். இந்த பிற்போக்கு சிந்தனை போக்கப்படவேண்டும். பெண்களை விபசாரத்தில் ஈடுபடத்துhண்டும் சமுதாய பொருளாதார அமைப்புகளை மாற்றியமைக்க வேண்டும் என்று பெண் விடுதலைக்காக குரல் கொடுத்தார்.
சமுதாயத்தில் நிலவும் சாதி, மத வேறுபாடுகளையும்,சடங்கு சம்பிரதாயங்களையும், கண்மூடித்தனமான மூடப்பழக்க வழக்கங்களையும் தனது இறுதி மூச்சு உள்ளவரை எதிர்த்துப் போராடினார்.
‘சாதிச் சடங்கால் இழிவடைந்தோம்-நிதம்
சாமிக்கழுது மனமுடைந்தோம்
வீதிக்கொரு கோயிலைப் படைத்தோம்-வேறு
வேலையில்லாது பந்தி புரிந்தோம்’
ஜீவாவின் முதல் மனைவி கண்ணம்மாள் ஆவார். கண்ணம்மாளின் தந்தை குலசேகரதாஸ். அவர் கடலூரில் இருந்து சட்டசபைக்குத் தேர்தெடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பு சட்டமன்ற உறுப்பினர். ஜீவா-கண்ணம்மாள் மகள் குமுதா. குமுதா தனது தந்தை ஜீவாவை 17 ஆண்டுகள் கழித்தே சந்தித்தார். குமுதா பிறந்த சில நாட்களில் கண்ணம்மாள் கண் மூடினார். ஜீவா தனது இரண்டாவது துணைவியாராக 1947 ஆம் ஆண்டு தோழர். பத்மாவதியைக் கலப்புத் திருமணம் செய்து கொண்டார். பத்மாவதி வாயிலாக உமூh, உமா என்ற இரு பெண் குழந்தைகளையும், ஸ்டாலின் மணிக்குமார் என்ற ஆண் குழந்தையையும் பெற்றெடுத்தனர்.
திருமணத்துக்குப் பின் அவர்களுடைய குடும்ப வாழ்க்கை சென்னை தாம்பரம் பகுதியில், புறம்போக்கு நிலத்தில் குடிசைவாழ் மக்கள் வாழ்ந்த பகுதியில் நடைபெற்றது. ஜீவா தனது இறுதிக்காலம் வரையில் இந்தக் குடிசையில் தான் வாழ்ந்து வந்தார்.
1963 ஆம் ஆண்டு சனவரி 18 ஆம் நாள் ஜீவாவுக்கு மார்பு வலி ஏற்பட்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி காலமானார். ஜீவாவின் மரணச் செய்தி கேட்டு தமிழகமே பதறியது. ஜீவாவின் உடல் சென்னை துறைமுகத் தொழிலாளர்கள் சங்க அரங்கத்தில் பொது மக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டது. கட்சி பேதமின்றி அனைத்துக் கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினார்கள். ஜீவாவின் இறுதி ஊர்வலத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், எழுத்தாளர்கள், கலைஹர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
ஏழை எளிய பாட்டாளி மக்களின் வறுமையையும், ஏழ்மையையும் தனது பாடல் வரிகள் மூலம் சமுதாயத்திற்கு வெளிச்சமிட்டுக் காட்டினார்.
“பாலின்றிப் பிள்ளை அழும்
பட்டினியால் தாயழுவாள்
வேலையின்றி நாமழுவோம் - என் தோழனே
வீடு முச்சூடும் அழும்.”
“காலுக்குச் செருப்புமில்லை
கால் வயிற்றுக் கூழுமில்லை
பாழுக்குழைத்தோமடா – என் தோழனே
பசையற்றுப் போனோமடா”
ஜீவா காலமெல்லாம் தான் ஏற்றுக் கொண்ட லட்சியத்திற்காக, பட்டாளி மக்களின் விடுதலைக்காக தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்தார். ஜீவா சிறந்த எழுத்தாளர், கவிஞர்,மேடை பேச்சாளர், இலக்கிய விமர்சகர்,பத்திரிக்கையாளர் ஆகிய சிறப்புகளைப் பெற்றிருந்தார்.
நல்ல பண்பாளராகவும்,மனித நேயம் மிக்கவராவும், அஞ்சா நெஞ்சம் கொண்டவராகவும், தியாக உணர்வு கொண்டவராகவும், தமது கொள்கையில் தீவிர பிடிப்பு உள்ளவராகவும் விளங்கினார்
.
.
No comments:
Post a Comment