Thursday, September 2, 2010

என்னையே ஏன் சோதிக்கிறாய்?

என்னையே ஏன் சோதிக்கிறாய்?
அமெரிக்காவின் உலகப்புகழ் பெற்ற விம்பில்டன் ஆட்டக்காரர் ஆர்தர் அஷெ (Arthur Ashe) 1983 ஆம் ஆண்டு இருதய அறுவை சிகிச்சையின் போது பெற்ற ரத்தம் எய்ட்ஸ் கிருமியால் பாதிக்கப்பட்டிருந்தது. அதன் மூலம் அவர் எய்ட்ஸ் நோயால் தாக்கப்பட்டு மரணத்துடன் போராடிக் கொண்டிருந்த போது அவருடைய ரசிகர்கள் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்ந்தனர். உலகெங்குமிருந்து அவர் ரசிகர்கள் கடிதங்கள் மூலமாகத் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்தனர். அதில் ஒரு ரசிகர் மிகுந்த வருத்தத்துடன் எழுதியிருந்தார். “கடவுள் ஏன் உங்களை இந்தக் கொடிய நோயிற்குத் தேர்ந்தெடுத்தார் என்பது எனக்கு விளங்கவில்லை” ஆர்தர் அஷே பதில் எழுதினார். “உலகமெங்கும் ஐந்து கோடி குழந்தைகள் டென்னிஸ் விளையாட ஆரம்பிக்கிறார்கள். ஐம்பது லட்சம் குழந்தைகள் டென்னிஸை முறைப்படி ஆடக் கற்கிறார்கள். ஐந்து லட்சம் பேர் திறமை பெறுகிறார்கள். ஐம்பதாயிரம் பேர் களத்திற்கு வருகிறார்கள். ஐந்தாயிரம் பேர் க்ராண்ட் ஸ்லாம் அளவை எட்டுகிறார்கள். ஐம்பது பேர் விம்பில்டன் வரை வருகிறார்கள். நான்கு பேர் அரையிறுதி ஆட்டம் வரையும் இருவர் இறுதி ஆட்டம் வரையும் வருகிறார்கள். அதுவரை வந்து நான் அதிலும் வென்று விம்பில்டன் கோப்பையை என் கையில் ஏந்தி நின்ற போது “கடவுளே ஏன் இதற்கு என்னை மட்டும் தேர்ந்தெடுத்தாய்” என்று நான் கடவுளைக் கேட்கவில்லை. இன்று இந்தக் கொடிய நோயின் வலியில் துடிக்கும் இந்த நேரத்தில் “கடவுளே ஏன் இதற்கு என்னை மட்டும் தேர்ந்தெடுத்தாய்” என்று நான் கடவுளைக் கேட்பது நியாயமாகாது”டென்னிஸ் விளையாட்டில் மட்டுமல்ல வாழ்க்கை விளையாட்டிலும் அவர் அடைந்திருந்த தேர்ச்சி நம்மை வியக்க வைக்கிறதல்லவா? இந்த மனப்பக்குவம் எத்தனை பேருக்கு வரும்?இதே கருத்தை கம்ப இராமாயணத்திலும் ஓரிடத்தில் இராமன் வாயால் நாம் கேட்கிறோம். காட்டிற்குச் செல்லும் இராமனுடன் காடு வரை வந்த சுமந்திரன் என்ற அமைச்சர் இராமனின் அந்த நிலைக்கு வருத்தப்படும் போது இராமன் சொல்கிறான். “இன்பம் வந்தால் இனிமையானது என்னும் போது துன்பம் வந்தால் மட்டும் அதைத் துறந்து விட முடியுமா?”(இன்பம் வந்துறும் எனில் இனியது ஆயிடைத் துன்பம் வந்துறும் எனில் துறக்கல் ஆகுமோ?)இன்பமும் துன்பமும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். நாணயத்தை ஏற்றுக் கொள்பவன் அதன் ஒரு பக்கத்தை மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியாது என்பதைப் போலவே வாழ்க்கையிலும் இன்பத்தை மட்டுமே வேண்டுதலும் நிஜ வாழ்க்கைக்கு ஒத்து வராத ஆசை.உலகிற்கு வரும் போது எதையும் நாம் எடுத்து வரவில்லை. பெற்றதெல்லாம் இங்கிருந்தே பெறப்பட்டது. உலகத்தை விட்டுச் செல்லும் போது அவை அனைத்தையும் விட்டே செல்ல வேண்டி இருக்கிறது. சில சமயம் நாம் இங்கு இருக்கும் போதே சிலவற்றை இழக்க நேரிடுகிறது. விதி பலவந்தமாய் நம்மிடம் இருந்து சிலவற்றைப் பறித்துக் கொள்கிறது. கண்ணதாசன் ஒரு திரைப்பாடலில் சொல்வது போல “இரவல் தந்தவன் கேட்கின்றான் இல்லை என்றால் அவன் விடுவானா?” ஆர்தர் அஷெ கூறுவது போல நமக்கு நன்மைகள் வந்து குவிகிற போது யாரும் “எனக்கு மட்டும் இத்தனை தந்தாயே ஏன்” என்று கேட்பதில்லை. பெற்ற நன்மைகளுக்கு நாம் நன்றி கூடத் தெரிவிப்பதில்லை. நன்மைகளைப் பெற்றது நமது சாமர்த்தியத்தால் என்று பெருமைப்படுகிறோம். அப்படி நன்மைகளைப் பெறுவது இயல்பே என்பது போல் நடந்து கொள்கிறோம். ஆனால் தீமைகள் நம் வாழ்க்கையில் நடந்து விட்டாலோ பழி போட ஆட்களைத் தேடுகிறோம். கடவுளிடம் “என்னையே ஏன் சோதிக்கிறாய்?” என்று கேட்கிறோம். ஏதோ உலகில் கஷ்டப்படும் ஒரே மனிதர் நாம் தான் என்பது போல் நடந்து கொள்கிறோம்.ஆர்தர் அஷெ போல் கடுமையான சூழ்நிலைகளிலும் உண்மையை உணர்ந்து தெளிகிற மனப்பக்குவம் பெறுவது அவ்வளவு சுலபமல்ல. என்றாலும் மாற்ற முடியாத சூழ்நிலைகளை ஏற்றுக் கொள்ளும் போது அவற்றின் கடுமைகளை நாம் மிகவும் குறைத்துக் கொள்கிறோம். இனி என்ன செய்யலாம் என்று ஆக்க பூர்வமாக சிந்திக்க ஆரம்பிக்கிறோம்.அந்த மனமாற்றமும் பக்குவமும் அடைவது ஒரு நாளில் அடையக்கூடியது அல்ல. முதலில் மாற்ற முடியாத சிறிய அசௌகரியங்களை முகம் சுளிக்காமலும், முணுமுணுக்காமலும் ஏற்றுக் கொள்ளப் பழகுங்கள். இந்த சிறிய அசௌகரியங்களால் குடிமுழுகி விடப் போவதில்லை என்று உங்களுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள். அந்த அசௌகரியங்களை உங்களுக்கு சவாலாக நினைத்துக் கொள்ளுங்கள். அப்படி நினைத்துக் கொள்ளும் போது பொறுத்துக் கொள்ளுதல் வெற்றி என்று ஆகிவிடுவதால் பொறுத்துக் கொள்ளுதல் எளிதாகிறது. அப்படியே படிப்படியாக உங்கள் சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். நல்லவைகளையே பெற வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயல்பே என்றாலும் தீயவைகளும் வரக்கூடும் என்பதை உணர்ந்திருங்கள். உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் இது இயற்கையான விதி தான். இதற்கு நீங்கள் மட்டும் விதிவிலக்காக இருக்க வேண்டும் என்று அடம் பிடிக்காதீர்கள். வந்ததை ஏற்றுக் கொண்டு இதை எப்படிக் குறைக்கலாம், அல்லது நீக்கலாம் என்று சிந்தித்து செயல்படுங்கள். அது நீக்கவோ, குறைக்கவோ முடியாததாக இருக்குமானாலும் அந்த விதியை ஏற்றுக் கொள்ளுங்கள். பெற்றிருக்கும் எத்தனையோ நன்மைகளை எண்ணிப் பாருங்கள். அத்தனை நன்மைகளுக்கு இடையில் இது போன்ற ஓரிரு தவிர்க்க முடியாத தீமைகள் வருவது இயல்பே என்று சமாதானமடையுங்கள். இது போன்ற சிந்தனைகள் பலப்படும் போது, உண்மைகள் உணரப்படும் போது, உங்கள் மன அமைதி ஒருபோதும் குறைவதில்லை.

பேச வழி காட்டுகிறார் வள்ளுவர்

பேச வழிகாட்டுகிறார் வள்ளுவர்
சொற்கள் மிக மிக வலிமையானவை. அவற்றை முறையாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள் பெறாத வெற்றிகள் இல்லை. அவற்றை முட்டாள்தனமாகப் பயன்படுத்துபவர்கள் படாத கஷ்டங்கள் இல்லை. பேச்சையே மூலதனமாக வைத்து நாட்டின் ஆட்சியையே பிடித்தவர்களை நாம் அறிவோம். சரியாகப் பேசத் தெரியாமல் இருப்பதெல்லாம் இழந்தவர்களையும் நாம் நம் தினசரி வாழ்க்கையில் பார்க்கிறோம்.அந்த அளவு முக்கியமான பேச்சுக் கலை பற்றி வள்ளுவர் பல இடங்களில் விளக்கி உள்ளார். பொதுவாக சில விஷயங்களை அந்தந்த அதிகாரங்களிலேயே விளக்கும் அவர், பேச்சைப் பற்றி பரவலாகப் பல இடங்களில் சொல்கிறார்.எப்படிப் பேச வேண்டும்?மிகவும் பொருத்தமான சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பேச வேண்டும் சொல்லுக சொல்லில் பிறிதோர் சொல் அச்சொல்லை வெல்லுஞ் சொல் இன்மை அறிந்து (645)(ஒரு சொல்லைச் சொல்லும் போது அதை விடச் சிறந்த பொருத்தமான சொல் இல்லாதவாறு தேர்ந்தெடுத்துச் சொல்ல வேண்டும்.) வள்ளுவர் சொல்வது போல் பேசும் முன் சொற்களைத் தெளிவாகத் தேர்ந்தெடுக்கப் பழகிக் கொண்டால் பேச்சில் சொற்குற்றமோ, பொருள் குற்றமோ வர வாய்ப்பே இல்லை.நன்மை தரும் விஷயங்களையே பேச வேண்டும். அதுவே தர்மம் என்கிறார் வள்ளுவர். வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்தீமை இல்லாத சொலல். (291)(ஒருபோதும் சிறிதளவேனும் தீமை இல்லாத சொற்களைச் சொல்வதே வாய்மை எனப்படும்.) மேலும் தீமை இல்லாதபடி பேசுவது, அடுத்தவர் மனதைப் புண்படுத்தாமல் இருப்பதால், அன்பும் நட்பும் கெட்டுவிடாமல் பாதுகாக்கிறது. அவசியமானதை ரத்தினச் சுருக்கமாகப் பேச வேண்டும் என்கிறார் வள்ளுவர். பேசிக் கொண்டே போவதை அறிவுக் குறைபாடாகக் கருதுகிறார் அவர்.பல சொல்லக் காமுறுவர் மன்ற மாசற்ற சில சொல்லத் தேறாதவர் (649)(குற்றமற்ற சில சொற்களைச் சொல்லத் தெரியாதவர் உண்மையாகவே பல சொற்களைச் சொல்லிக் கொண்டிருக்க விரும்புவர்.) எனவே அதிகமாகப் பேசும் ஒவ்வொருவரும் தாங்கள் சொல்ல விரும்புவதை இன்னும் சுருக்கமாகச் சொல்ல முடியுமா என்று அவ்வப்போது ஆராய்ச்சி செய்து கொள்வது நல்லது.எப்படிப் பேசக் கூடாது?அடுத்தவர் மனம் புண்படும்படியாக பேசக் கூடாது என்கிறார். ஏனென்றால்தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதேநாவினாற் சுட்ட வடு (130)(தீயினால் சுட்ட புண் வெளியே வடு தெரிந்தாலும் காலப்போக்கில் உள்ளே ஆறி விடும். ஆனால் நாவினால் கடுமையான சொற்களால் சுட்ட வடு என்றுமே ஆறாது). எத்தனையோ தீராத பகைக்கு முக்கிய காரணமாக இருப்பது புண்படுத்தும் சில அனாவசிய வார்த்தைகளே.கடுமையான சொற்களைப் பேசுவது கூடாது என்கிறார் வள்ளுவர். அது அர்த்தமற்றது என்றும் முட்டாள்தனமானது என்றும் தன் பாணியில் அழகான உவமைகளுடன் கூறுகிறார் பாருங்கள்.இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன் கொலொவன்சொல் வழங்குவது (99)(இனிமையான சொற்கள் இன்பம் தருவதைக் காண்கின்றவன் அதற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயனைக் கருதியோ என்று வள்ளுவரே ஆச்சரியப்படுகிறார்.)இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று (100)(இனிய சொற்கள் இருக்கும் போது கடுமையான சொற்களைப் பயன்படுத்துவது கனிகள் இருக்கையில் காய்களைத் தேர்ந்தெடுப்பதற்கு ஒப்பானது). பல நேரங்களில் கடுமையான சொற்களுக்கு அவசியமே இருப்பதில்லை. சொல்லி விட்ட சொல்லைத் திரும்பப் பெறும் வாய்ப்பும் நமக்கில்லை என்பதால் நமக்கோ அடுத்தவர்க்கோ பலனைத் தராத, துன்பத்தை மட்டுமே தருகிற சுடு சொற்களை நம் பேச்சிலிருந்து நீக்கி விடலாமே.பயனில்லாத சொற்களைச் சொல்வது தவறு என்றால் அதை விவரித்துச் சொல்வதை இங்கிதமில்லாத தன்மை, அறமில்லாத தன்மை என்று கடுமையாக வள்ளுவர் விமரிசிக்கிறார்.நயனிலன் என்பது சொல்லும் பயனிலபாரித்துரைக்கும் உரை (193)(ஒருவன் பயனில்லாத விஷயங்களைப் பற்றி விரிவாகப் பேசுவது அவன் அறம் இல்லாதவன் என்பதைத் தெரிவிக்கும்.) இதற்கு எத்தனையோ தினசரி உதாரணங்களை நாம் பார்க்க முடியும். தேவையற்ற, யாருக்கும் பலனளிக்காத விஷயங்களை விரிவாகப் பேசுபவன் அதன் மூலம் தன் தரத்தை மற்றவர்களுக்குப் பிரசாரம் செய்கிறான். எதை எங்கே பேசக் கூடாது?தெரியாத விஷயங்களைப் பேசக் கூடாது. அதுவும் தெரிந்தவர்கள் முன் பேசவே கூடாது என்கிறார் வள்ளுவர். பேசி முட்டாள் என்பதை நிரூபிப்பதை விட அமைதியாக இருந்து நல்ல பெயரை வாங்கிக் கொள்வது நல்லது என்கிறார்.கல்லாதவரும் நனி நல்லர் கற்றார் முன்சொல்லாதிருக்கப் பெறின் (403)(கற்றவர் முன் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருப்பார்களேயானால் கல்லாதவர்களும் நல்லவர்களே ஆவர்). மேலும் யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டுமோ அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளாமல் அங்கே உளறிக் கொட்டி அறிவின்மையை பறைசாட்டுவது வடிகட்டிய முட்டாள்தனம் அல்லவா?நல்ல பேச்சிற்கு என்ன பலன்?நன்மை தரும் நல்ல பேச்சு கேட்பவருக்கு தக்க சமயத்தில் தவறி விடாமல் காத்துக் கொள்ள உதவும் என்கிறார் வள்ளுவர்.இழுக்கல் உடையுழி ஊற்றுகோல் அற்றேஒழுக்கமுடையார் வாய்ச் சொல். (415)(ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச்சொற்கள் வழுக்கும் சேற்று நிலத்தில் ஊன்று கோல் போல் தளர்ந்த சமயம் உதவும்.) வாழ்க்கையில் வழுக்கி விழாமல் இருக்க அறிவார்ந்த அனுபவஸ்தர்களின் வார்த்தைகளை விடச் சிறந்த ஊன்றுகோல் கிடையாது. அவை பல இக்கட்டான சூழ்நிலைகளில் நமக்கு வழிகாட்டும். கேட்பவருக்குப் பலன் அதுவென்றால் பேசுபவருக்கு என்ன பலன்? நன்மையான பேச்சுகளை நல்ல விதமாகச் சொல்பவரை உலகமே பின்பற்றி நடக்கும் என்கிறார் வள்ளுவர். விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின் (648)(கருத்துகளை ஒழுங்காகக் கோர்த்து இனிமையாகச் சொல்ல வல்லவருடைய ஏவலை உலகமே கேட்டு நடக்கும்.) நல்ல கருத்துகளை நல்ல விதமாகச் சொல்லி பலர் வாழ்க்கைப் பாதைகளை நெறிப்படுத்த முடிந்தால் அந்தத் திருப்திக்கு நிகரேது?மொத்தத்தில் நல்லதை மட்டுமே, சுருக்கமாக, இனிமையாக, மற்றவருக்குப் பயன் தரும் வண்ணம் பேச வேண்டும் என்கிறார் வள்ளுவர். நாம் அப்படிப் பேசப் பழகிக் கொண்டால் அது அடுத்தவர்களுக்கு நல்லது, நமக்கு மிக மிக நல்லது.

கழுகிற்கும் உந்துதல் அவசியமே

கழுகிற்கும் உந்துதல் அவசியமே!
பறவைகளில் கழுகுகள் மிக சக்தி வாய்ந்தவை. அவை மிக உயரமாகப் பறக்கக் கூடியவை. அவற்றை வலிமை மற்றும் தைரியம் ஆகியவற்றின் சின்னமாகக் கருதுகின்றோம். ஆனால் அந்தக் கழுகுகளின் பறக்கும் சாகச சக்திகளும், வலிமையும், தைரியமும் பிறப்பிலேயே வருபவை அல்ல. அவை கழுகுகளால் ஒரு கட்டத்தில் கற்றுக் கொள்ளப்படுபவை தான். குஞ்சுகளாகக் கூட்டில் சுகமாக, பாதுகாப்பாக இருக்கும் போது கழுகுகள் பலவீனமாகவே இருக்கின்றன. அவை அப்படியே சுகமாகவும், பாதுகாப்பாகவுமே இருந்து விட்டால் வலிமையாகவும், சுதந்திரமாகவும் மாறுவது சாத்தியமல்ல. எனவே குஞ்சுகளாக இருக்கும் போது வேண்டிய உணவளித்து, பாதுகாப்பாக வைத்திருக்கும் தாய்ப்பறவை குஞ்சுகள் பறக்க வேண்டிய காலம் வரும் போது மாறி விடுகின்றது. முதலில் கூடுகளில் மெத்தென இருக்கும் படுக்கையினைக் கலைத்து சிறு குச்சிகளின் கூர்மையான பகுதிகள் வெளிப்படும்படி செய்து கூட்டை சொகுசாகத் தங்க வசதியற்றபடி செய்து விடுகின்றது. பின் தன் சிறகுகளால் குஞ்சினை அடித்து இருக்கும் இடத்தை விட்டுச் செல்லத் தூண்டுகின்றது. தாய்ப் பறவையின் இம்சை தாங்க முடியாத கழுகுக்குஞ்சு கூட்டின் விளிம்பு வரை வந்து நிற்கின்றது..அது வரை பறந்தறியாத குஞ்சு கூட்டின் வெளியே உள்ள உலகத்தின் ஆழத்தையும் உயரத்தையும் விஸ்தீரணத்தையும் பார்த்து மலைத்து நிற்கின்றது. அந்தப் பிரம்மாண்டமான உலகத்தில் தனித்துப் பயணிக்க தைரியமற்று பலவீனமாக நிற்கின்றது. அது ஒவ்வொரு குஞ்சும் தன் வாழ்க்கையில் சந்தித்தாக வேண்டிய ஒரு முக்கியமான தவிர்க்க முடியாத கட்டம். அந்த நேரத்தில் அந்தக் குஞ்சையே தீர்மானிக்க விட்டால் அது கூட்டிலேயே பாதுகாப்பாகத் தங்கி விட முடிவெடுக்கலாம். ஆனால் கூடு என்பது என்றென்றைக்கும் பாதுகாப்பாகத் தங்கி விடக் கூடிய இடமல்ல. சுயமாகப் பறப்பதும் இயங்குவதுமே ஒரு கழுகுக்கு நிரந்தரப் பாதுகாப்பு என்பதைத் தாய்ப்பறவை அறியும்.அந்தக் கழுகுக்குஞ்சு கூட்டின் விளிம்பில் என்ன செய்வதென்று அறியாமல் வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டு இருக்கும் அந்தக் கட்டத்தில் தாய்ப்பறவை அந்தக் குஞ்சின் உணர்வுகளை லட்சியம் செய்யாமல் குஞ்சை கூட்டிலிருந்து வெளியே தள்ளி விடுகிறது. அந்த எதிர்பாராத தருணத்தில் கழுகுக்குஞ்சு கஷ்டப்பட்டு சிறகடித்துப் பறக்க முயற்சி செய்கின்றது. முதல் முறையிலேயே கற்று விடும் கலையல்ல அது. குஞ்சு காற்றில் சிறகடித்துப் பறக்க முடியாமல் கீழே விழ ஆரம்பிக்கும் நேரத்தில் தாய்க்கழுகு வேகமாக வந்து தன் குஞ்சைப் பிடித்துக் கொள்கிறது. குஞ்சு மீண்டும் தாயின் பிடியில் பத்திரமாக இருப்பதாக எண்ணி நிம்மதியடைகிறது. அந்த நிம்மதி சொற்ப நேரம் தான். தன் குஞ்சைப் பிடித்துக் கொண்டு வானுயரப் பறக்கும் தாய்க்கழுகு மீண்டும் அந்தக் கழுகுக்குஞ்சை அந்தரத்தில் விட்டு விடுகிறது. மறுபடி காற்று வெளியில் சிறகடித்துப் பறக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அந்தக் குஞ்சு உள்ளாகிறது. இப்படியே குஞ்சை வெளியே தள்ளி விடுவதும், காப்பாற்றுவதுமாகப் பல முறை நடக்கும் இந்தப் பயிற்சியில் கழுகுக் குஞ்சின் சிறகுகள் பலம் பெறுகின்றன. காற்று வெளியில் பறக்கும் கலையையும் விரைவில் கழுகுக்குஞ்சு கற்றுக் கொள்கிறது. அது சுதந்திரமாக, ஆனந்தமாக, தைரியமாக வானோக்கிப் பறக்க ஆரம்பிக்கிறது.கழுகுக் குஞ்சு முதல் முறையாக கூட்டுக்கு வெளியே உள்ள உலகத்தின் பிரம்மாண்டத்தைக் கண்டு பயந்து தயங்கி நிற்கும் அந்தத் தருணத்தில் தாய்க்கழுகு அதனை முன்னோக்கித் தள்ளியிரா விட்டால் அந்த சுதந்திரத்தையும், ஆனந்தத்தையும், தைரியத்தையும் அந்தக் கழுகுக்குஞ்சு தன் வாழ்நாளில் என்றென்றைக்கும் கண்டிருக்க முடியாது. பறக்க அறியாத அந்தக் குஞ்சை கூட்டினை விட்டு வெளியே தாய்ப்பறவை தள்ளிய போது அது ஒருவிதக் கொடூரச் செயலாகத் தோன்றினாலும் பொறுத்திருந்து விளைவைப் பார்க்கும் யாருமே அந்தச் செயல் அந்தக் குஞ்சிற்குப் பேருதவி என்பதை மறுக்க முடியாது.ஒவ்வொரு புதிய சூழ்நிலையும் யாருக்கும் ஒருவித பதட்டத்தையும், பயத்தையும் ஏற்படுத்தக் கூடும். ஆனால் அந்தக் காரணத்திற்காகவே அந்த சூழ்நிலைகளையும், அனுபவத்தையும் மறுப்பது வாழ்வின் பொருளையே மறுப்பது போலத் தான். கப்பல் துறைமுகத்தில் இருப்பது தான் அதற்கு முழுப்பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால் கப்பலை உருவாக்குவது அதை துறைமுகத்தில் நிறுத்தி வைக்க அல்ல. கப்பலின் உபயோகமும் அப்படி நிறுத்தி வைப்பதில் இல்லை. கழுகிற்கும், கப்பலுக்கும் மட்டுமல்ல, மனிதனுக்கும் இந்த உண்மை பொருந்தும். தாய்க்கழுகு தான் குஞ்சாக இருக்கையில் முதல் முதலில் தள்ளப்பட்டதை எண்ணிப்பார்த்து “நான் பட்ட அந்தக் கஷ்டம் என் குஞ்சு படக்கூடாது. என் குஞ்சிற்கு அந்தப் பயங்கர அனுபவம் வராமல் பார்த்துக் கொள்வேன்” என்று நினைக்குமானால் அதன் குஞ்சு பலவீனமான குஞ்சாகவே கூட்டிலேயே இருந்து இறக்க நேரிடும். ஆனால் அந்த முட்டாள்தனத்தை தாய்க்கழுகு செய்ததாக சரித்திரம் இல்லை.அந்த தாய்க்கழுகின் அறிவுமுதிர்ச்சி பல பெற்றோர்களிடம் இருப்பதில்லை. ”நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது” என்று சொல்லக்கூடிய பெற்றோர்களை இன்று நாம் நிறையவே பார்க்கிறோம். ஒரு காலத்தில் கூட்டுக் குடும்பமும் அதில் கும்பலாகக் குழந்தைகளும் இருந்த போது பெற்றோர்களுக்குத் தங்கள் ஒவ்வொரு குழந்தை மீதும் தனிக்கவனம் வைக்க நேரம் இருந்ததில்லை. அதற்கான அவசியம் இருப்பதாகவும் அவர்கள் நினைத்ததில்லை. ஆனால் இந்தக் காலத்தில் ஓரிரு குழந்தைகள் மட்டுமே உள்ள நிலையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மிக நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள். அதில் தவறில்லை. ஆனால் தான் பட்ட கஷ்டங்கள் எதையும் தங்கள் குழந்தைகள் படக்கூடாது என்று நினைக்கும் போது பாசமிகுதியால் அவர்கள் அந்தக் கஷ்டங்கள் தந்த பாடங்களின் பயனைத் தங்கள் பிள்ளைகளுக்கு அளிக்கத் தவறி விடுகிறார்கள்.அதற்காக “நான் அந்தக் காலம் பள்ளிக்கூடம் செல்ல பல மைல்கள் நடந்தேன். அதனால் நீயும் நட” என்று பெற்றோர்கள் சொல்ல வேண்டும் என்று சொல்லவில்லை. வசதிகளும், வாய்ப்புகளும் பெருகி உள்ள இந்தக் காலத்தில் அப்படிச் சொல்வது அபத்தமாகத் தான் இருக்கும். இன்றைய நவீன வசதி வாய்ப்புகளின் பலனை பிள்ளைகளுக்கு அளிப்பது அவசியமே. தேவையே இல்லாத கஷ்டங்களை பிள்ளைகள் படத் தேவையில்லை தான். ஆனால் ’எந்தக் கஷ்டமும், எந்தக் கசப்பான அனுபவமும் என் பிள்ளை படக்கூடாது’ என்று நினைப்பது அந்தப் பிள்ளையின் உண்மையான வளர்ச்சியைக் குலைக்கும் செயலே ஆகும்.முட்டைப்புழு எப்படி வண்ணத்துப்பூச்சி ஆக மாறுகிறது என்பதை உயிரியல் ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு நேரடியாகப் பார்க்க வாய்ப்பை ஏற்படுத்தி விளக்கிக் கொண்டிருந்தார். அந்த முட்டையில் இருந்து வெளியே வர அது முயலும் கட்டத்தில் அதையே எந்தத் தொந்திரவும் செய்யாமல் கவனித்துக் கொண்டிருக்கச் சொல்லி விட்டு அவர் வெளியே சென்று விட்டார். அந்த முட்டைக் கூட்டிலிருந்து வெளியே வர அந்தப் பூச்சி படும் பாட்டைக் கண்ட ஒரு மாணவனுக்கு மனம் இரங்கியது. அந்தப் பூச்சி கஷ்டப்படாமல் வெளியே வர ஏதுவாக அந்த முட்டைக் கூட்டை உடைத்து விட்டான். அந்தப் பூச்சி சிறிது நேரத்தில் இறந்து போயிற்று.திரும்பி வந்த ஆசிரியரிடம் நடந்ததை மாணவர்கள் கூறினார்கள். ஆசிரியர் அந்த மாணவனிடம் சொன்னார். “அந்த முட்டையில் இருந்து வெளியே வர அந்த வண்ணத்துப் பூச்சி செய்யும் கடும் முயற்சியில் தான் அதன் சிறகுகள் பலம் பெறுகின்றன. அது வண்ணத்துப் பூச்சியாக மாற அந்த கஷ்டப்பட்டு செய்யும் முயற்சிகள் உதவுகின்றன. நீ அந்த கடும் முயற்சியை நிறுத்தியதன் மூலம் அது வண்ணத்துப் பூச்சியாக உருவாவதையும் தடுத்து விட்டாய்”வாழ்க்கையில் சில கஷ்டங்களும், சில கசப்பான அனுபவங்களும் மனிதனுக்கு அவசியமானவையே. அவற்றில் வாழ்ந்து தேர்ச்சி அடையும் போது தான் அவன் வலிமை அடைகிறான். அவற்றிலிருந்து பாதுகாப்பளிப்பதாகப் பெற்றோர் நினைப்பது அவனுக்கு வாழ்க்கையையே மறுப்பது போலத் தான். சில கஷ்டங்கள் பிள்ளைகள் படும் போது பெற்றோர்களுக்கு மனம் வருத்தமாக இருக்கலாம். ஆனால் கஷ்டங்களே இல்லாமல் இருப்பது வாழ்க்கை அல்ல, வாழ்க்கையின் அர்த்தமும் அல்ல, அது சாத்தியமும் அல்ல. கஷ்டங்களை எப்படி எதிர்கொள்வது, எப்படி அதிலிருந்து மீள்வது என்று கற்றுக் கொள்வது தான் அந்தக் கஷ்டங்களை வெற்றி கொள்ளும் வழி. ”கஷ்டங்களே தெரியாமல் என் பிள்ளையை வளர்த்துவேன்” என்று சொல்வது “வாழ்க்கையே என்னவென்று தெரியாமல் என் பிள்ளையை வளர்த்துவேன்” என்று சொல்வதற்கு சமம். பெற்றோர் பிள்ளைகளுக்கு வழி காட்டலாம். ஆனால் வழிநெடுகக் கூடப் போய் அவர்களைப் பலவீனர்களாக்கி விடக்கூடாது. எப்போதுமே அடுத்தவர்களைச் சார்ந்தே இருக்கிறவர்களாக இருத்தி விடக்கூடாது. பெற்றோர்களே! நீங்களும் இந்தத் தவறைச் செய்கிறீர்களா என்பதை யோசித்துப் பாருங்கள். உங்கள் பிள்ளைகள் அவரவர் கால்களில் நிற்கும் காலம் வந்த பின்பும் தாங்கிக் கொண்டு இருக்கிறீர்களா என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படியிருந்தால் தாய்க்கழுகைப் போல உங்கள் பிள்ளைகளைத் தள்ளி விடுவது தான் அவர்களுக்கு நீங்கள் செய்யக்கூடிய மிகப்பெரிய உதவி.இளைஞர்களே! பெற்றவர்களுடைய தயவிலோ, மற்றவர்களுடைய தயவிலோ சொகுசான பாதுகாப்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களா என்பதை நீங்களும் சிந்தித்துப் பாருங்கள். அப்படி இருந்தால் உடனடியாக அந்தச் சிறையிலிருந்து தப்பித்து விடுவது நல்லது. வாழ்வில் சுதந்திரமும், வலிமையும், அர்த்தமும் பெற சிறகை விரித்துப் புறப்படுங்கள். உங்களால் சமாளிக்க முடியுமா என்று சந்தேகம் கொள்ளாதீர்கள். பலவீனர்களாக இருக்க இறைவன் உங்களைப் படைக்கவில்லை. எனவே நீங்கள் சமர்த்தர்களாகவும், வலிமை உடையவர்களாகவும் இருக்கச் செய்யும் எல்லா முயற்சிகளிலும் இறைவன் உங்களுக்கு நிச்சயம் உதவியாக இருப்பான்.