Saturday, March 1, 2014

விடா முயற்சி :



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.

இந்த உலகினில் தெய்வத்தால் செய்ய  முடியாத காரியம் என்ற ஒன்று இருக்க முடியாது ,அப்படிப்பட்ட இறைவனாலேயே செய்ய இயலாத ஒரு காரியம் இருந்தாலும் ,அதனை ஒருவர் விடா முயற்சியுடன் செய்தால் அவருடைய உடல் உழைப்பிற்கு ஏற்ற பலன் நிச்சயம் கிடைக்கும் .
சில வேளைகளில் நாம் ஒரு பணியை மேற்கொண்டு அதில் ஏற்படும் சிறு சிறு தோல்விகள் ,பிரச்சனைகளைக் கண்டு மனம் தளர்ந்து   பாதியிலேயே நிறுத்தி விடுகின்றோம் .அவ்வாறாக இல்லாமல் ஏற்பட்ட தோல்விக்கான காரணத்தை நன்கு ஆராய்ந்து ,புதிய ஒரு கோணத்தில் அந்த பிரச்சனைக்கான தீர்வை பற்றி மட்டும் யோசித்து விடா முயற்சியுடன் தொடர்ந்து செய்வோமானால் வெற்றி நமக்கே .
ஒரு நிருபர் தாமஸ் ஆல்வா எடிசனை பார்த்து நீங்கள் மின்சார விளக்கை கண்டுபிடிக்கும் முயற்சியில் 1000 முறை தோல்வி அடைந்தீர்களே அதைப் பற்றி என்ன நினைகிறீர்கள் ? என்று கேட்டார் .அதற்கு எடிசன் நான் 1000 முறை தோல்வி அடையவில்லை இந்த மின்சார விளக்கு ஆயிரம் வழிமுறைகளை சோதித்த பிறகு கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்பு .ஒவ்வொரு முறை நான் முயற்சி செய்யும்போதும் எந்த முறைகளில் எல்லாம் மின்சார விளக்கை எரிய வைக்க முடியாது என்று என்று கண்டு பிடித்தேன் என்றார் .
மற்றவர்களின் பார்வையில் ஒரு செயல் தோல்வியாக தெரிந்தால் அதைப் பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை .நாம் யார், நம்முடைய குறிக்கோள் என்ன  ,எதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம்  என்பதைத் தீர்மானிக்கும் சக்தி நமக்குள்ளே மட்டுமே உள்ளது. எடிசனுக்கு முன்னரும் ,அவர் முயற்சி செய்த அதே காலத்திலும் பலர் மின்சார விளக்கை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் .அவர்கள் அனைவரும் இடையே ஏற்பட்ட சில பிரச்சனைகள்  ,தடங்கல்களை எண்ணி பாதியிலேயே தங்கள் முயற்சியை நிறுத்தி இருப்பார்கள் .தொடர்ந்து முயன்ற எடிசன் வெற்றியைக் கண்டார் .
விடா முயற்சியைப் பற்றி விவாதிக்கும்போது ஒரு கருத்தை  நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் ,விடா முயற்சி செய்யும் பொது அதற்கு முன்பே நமக்கு ஏற்பட்ட தோல்விகளின் மூலம் பாடம் கற்க வேண்டும் .ஒரு நண்பர் மக்கள் நடமாட்டம் குறைந்த மலைப்  பகுதியில் தேநீர் விற்றுக் கொண்டிருந்தார் ,அவருடைய வியாபாரம் சரியாக நடைபெறாமல் நஷ்டத்தில் சென்று கொண்டிருந்தது ,விடா முயற்சி செய்கிறேன் என்று நினைத்த நண்பர் அடுத்த நாள் முதல் அந்த மலையின் உச்சியில்  ஐஸ் வியாபாரம் செய்தார் அதிலும் நஷ்டம் ஏற்பட்டது ,பிறகு அங்கே மீன் வியாபாரம் செய்தார் அதிலும் நஷ்டமே ஏற்பட்டது .நண்பர்களே அந்த நண்பர் ஏற்பட்ட தோல்வியில் இருந்து சரியாக பாடம் கற்கவில்லை அவர் செய்ய வேண்டியது என்னவென்றால் முதலில் மக்கள் நடமாட்டம் குறைந்த மலைப் பகுதியில் இருந்து வெளியேறி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்கு வந்து தன்னுடைய தொழிலை துவங்கி இருக்கவேண்டும் .இந்த நண்பரைப் போலவே வாழ்க்கையில் நம்மில் சிலர் ஏற்பட்ட தோல்வியில் சரியாக பாடம் கற்காமல் விடா முயற்சி செய்கிறேன் என்னால் வெற்றி பெற இயலவில்லை என்று விரக்தி அடைகிறோம் .
உங்களுடன் படித்த ஒருவர் வெற்றி அடைகிறார் என்றால் உங்களாலும் வெற்றி அடைய முடியும் ,உங்களுடன் பணிபுரியும் ஒருவர் முன்னேறுகிறார் என்றால் உங்களாலும் முடியும் ,நீங்கள் தேர்ந்தெடுக்கும் தொழில் துறையில் ஒருவர் பலகோடி ருபாய் சம்பாதிக்கிறார் என்றால் உங்களாலும் நிச்சயம் சம்பாதிக்க முடியும் .நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான் அவர் தொழில் செய்யும் முறையைக் கற்க வேண்டும் ,அவரை விட சிறப்பாக செய்யும் முறையை ஆராய்ந்து விடா முயற்சியுடன் உழைத்தால் வெற்றி உங்களுக்கே .

சரவணன் பாலாஜி