Sunday, May 22, 2011

இயற்கையிடம் பாடம் படியுங்கள்!

மே 27 - தத்தாத்ரேயர் ஜெயந்தி!

இறைவனே, தத்தாத்ரேயர் எனும் பெயரில், பூமியில் ரிஷியாகப் பிறந்தார். இயற்கையைப் பார்த்து, வாழ்வை வகுத்துக் கொள்ளுங்கள் என, அறிவுறுத்தினார். இவரது வரலாறை கேளுங்கள்...அத்திரி மகரிஷியும், அவரது மனைவி அனுசூயாவும் காட்டில் வசித்தனர். கணவருக்கு பணிவிடை செய்வது மட்டுமே அனுசூயாவின் பணி. தினமும், தன் கணவருக்கு பாத பூஜை செய்த தீர்த்தத்தை, தலையில் தெளித்த பிறகே, பணிகளைத் துவக்குவாள். அந்தளவுக்கு கணவர் மீது பாசம். குழந்தை இல்லாத அவள், தனக்கு சிவன், விஷ்ணு, பிரம்மாவைப் போல தெய்வக் குழந்தைகள் பிறக்க வேண்டுமென விரும்பினாள். மும்மூர்த்திகளும் தங்கள் தேவியரிடம் ஆலோசனை கேட்டனர். அவளுக்கு, ஒரு சோதனை வைத்து, அதில் வெற்றி பெற்றால், அவளது குழந்தையாகப் பிறக்கலாம் என அவர்கள் யோசனை தெரிவித்தனர். எப்படியும், இந்த சோதனையில், அவள் தோற்று விடுவாள் என்பது அவர்களது கணிப்பு.அதன்படி, மூவரும் துறவி வடிவில் அவளது குடிசைக்கு வந்து, உணவிடும்படி கேட்டனர். அவள் உணவுடன் வரும் போது, "பெண்ணே... நீ நிர்வாணமான நிலையில் உணவிட்டால் தான், அதை ஏற்போம்...' என்றனர்; அனுசூயா கலங்கவில்லை. அவளுக்கு, தன் கற்புத்திறன் மீதும், பதிவிரதா தன்மையின் மீதும் அதீத நம்பிக்கையுண்டு.கணவருக்கு பாத பூஜை செய்த தீர்த்தத்தை எடுத்து, "நான், என் கணவருக்கு செய்யும் பணிவிடை உண்மையானால், இந்த துறவிகள் குழந்தைகளாகட்டும்...' எனச் சொல்லி, அவர்கள் மேல் தெளித்தாள்; மூன்று தெய்வங்களும் குழந்தைகளாகி விட்டனர்.தனக்கு பால் சுரக்கட்டும் என, அடுத்த வேண்டுகோளை வைத்தாள். நிர்வாண நிலையில், குழந்தைகளுக்கு பாலூட்டினாள். வெளியே சென்றிருந்த அத்திரி முனிவர், தன் ஞான திருஷ்டியால் நடந்ததை அறிந்தார். வீட்டுக்கு வந்த அவர், அந்தக் குழந்தைகளை ஒரு சேர அணைத்தார். ஒரு உடல், மூன்று தலை, இரண்டு கால்கள், ஆறு கைகளுடன் குழந்தை இணைந்தது. அதற்கு, "தத்தாத்ரேயர்' என்று பெயரிட்டார்.தங்கள் கணவன்மாருக்கு ஏற்பட்ட கதியை அறிந்த முப்பெருந்தேவியரும், அனுசூயாவின் குடிசைக்கு வந்தனர். நடந்ததை கூறி, தங்கள் கணவன்மாரை சுயவடிவில் திருப்பித் தர கேட்டனர். அவர்களிடம், "உங்கள் கணவன்மார் உங்களுக்கு திரும்ப கிடைக்க வேண்டும் என்பது போல், குழந்தையில்லாத எங்களுக்கு இந்தக் குழந்தையும் வேண்டும்...' என்று கோரிக்கை வைத்தார் அத்திரி மகரிஷி.உடனே, மூன்று தெய்வங்களும் எழுந்தனர். "ரிஷியே... உங்கள் விருப்பப்படி இந்தக் குழந்தை இங்கேயே இருக்கும்; இவன் பெரிய ரிஷியாக விளங்குவான்...' என்று கூறி, மறைந்தனர்.தத்தாத்ரேயர் சிறந்த ஞானியாக விளங்கினார். வேதாந்த உண்மைகளை விளக்கும் அவதூத கீதையை முருகப் பெருமானுக்கு கற்றுக் கொடுத்தார். எந்நேரமும் மகிழ்ச்சியாக இருப்பார். இயற்கையிடம் இருந்து, மகிழ்ச்சியாக வாழ்வதைக் கற்றுக் கொண்டார்."பொறுமை யையும், பிறருக்கு நன்மை செய்வதையும் பூமியிடமிருந்து கற்றேன். தூய்மையை, தண்ணீரிடம் படித்தேன். பலருடன் பழகினாலும் அவர்களிடம் பற்று வைக்கக் கூடாது என்பதை, காற்றிடம் கற்றேன். உணவுக்காக அலையக் கூடாது என்பதை, ஒரே இடத்தில் கிடக்கும் மலைப்பாம்பிடம் படித்தேன். வேடனிடம் தாய்ப்புறா சிக்கியதைப் பார்த்து, தாங்களும் சிக்கிக் கொண்ட குஞ்சு புறாக்களைப் பார்த்து, பாசமே துன்பங்களுக்கு காரணம் என, புரிந்து கொண்டேன். நிலைகுலையாமல் இருக்க வேண்டும் என்பதை, நூற்றுக்கணக்கான நதிகள் பாய்ந்தாலும் கலங்காமல் இருக்கும் கடலைப் பார்த்து, புரிந்து கொண்டேன். சிறிது <உணவே போதும் என்பதை, மலரில் தேன் குடிக்கும் வண்டிடம் கற்றேன். மீன் துண்டுடன் பறந்த பருந்தை, பிற பருந்துகள் துரத்தின. அந்தப் பருந்து, மீனை கீழே போடவே, விரட்டிய பருந்துகள் அதை விட்டு விட்டன. இதில் இருந்து உலகத்தின் மீது ஆசையை விட்டால், எல்லா துன்பமும் பறந்துவிடும் என்று உணர்ந்தேன்!' இப்படி, வாழ்வுக்கு தேவையான அரிய கருத்துக்களை சொன்ன தத்தாத்ரேயரின் பிறந்தநாளன்று, அவரை நினைவு கூர்வோம். சென்னை கந்தாஸ்ரமம், பவானி சங்கமேஸ்வரர் கோவில்களில் தத்தாத்ரேயருக்கு சன்னிதி உள்ளது