Sunday, December 15, 2013

வள்ளல் எம்ஜிஆர்! 4

வள்ளல் எம்ஜிஆர்! 4
பத்திரிகை நிற்காமல் வர எம்ஜிஆர் தந்த யோசனை
நான் ஆசிரியராகப் பணியாற்றிய ஒரு பிரபல பத்திரிகையில் பிழை திருத்துவோராக சேர்ந்தார் ஒரு முதியவர். பெயர் கவுந்தி. ஒரு காலத்தில் அவரும் பத்திரிகை ஆசிரியராக இருந்தவர். எம்ஜிஆரைப் பற்றி என்னிடம் எப்போது பேசினாலும் அவரால் அழாமல் இருக்க முடியாது. இத்தனைக்கும் அவர் சிவாஜி ரசிகர். எம்ஜிஆரை திட்டி எழுதுவது இவருக்கும் பிடித்தமான விஷயம். ஆனால் பத்திரிகை நடத்த முடியவில்லை. யாரும் உதவ முன்வராத நேரம். பத்திரிகையை மூட உத்தேசித்தவருக்கு கடைசியாக ஒரு யோசனை சொன்னார்கள் நண்பர்கள். ‘எம்ஜிஆரைப் போய் பாருங்கள்!’
அவரும் உடனடியாகப் போய் நிலைமையைச் சொன்னார். உடனே எம்ஜிஆர் பணத்தை தூக்கி கொடுத்துவிடவில்லை.  “நீங்கள் போய் எம்ஜிஆர் மலர் என்ற பெயரில் புத்தம் போடுங்கள். அத்துடன் வரவிருக்கும் எனது நான்கு படங்களுக்கும் விளம்பரம் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் தொடர்ந்து வழக்கம்போல எழுதுங்கள். உதவி செய்தேன் என்பதற்காக என்னைப் புகழ்ந்து எழுத வேண்டாம்,” என்றார்.
தலை கவிழ்ந்தபடி வந்தார் அந்த பத்திரிகையாளர். பின்னர் எம்ஜிஆர் சொன்னபடி அவர் போட்ட சிறப்பு மலர் 50 ஆயிரம் பிரதிகள் விற்றதாம். அத்துடன் தொடர்ந்து எம்ஜிஆர் படங்களின் விளம்பரங்கள் கிடைக்க, பத்திரிகையை நிறுத்த வேண்டிய அவசியம் வரவில்லை கவுந்திக்கு.  “பணம் வாங்கிய குற்றவுணர்ச்சி பத்திரிகையாளனுக்கு வராமல் பார்த்துக் கொள்ள எம்ஜிஆர் கையாண்ட உத்தி அது. பலருக்கும் இதுபோல உதவியிருக்கிறார். அதெல்லாம் இப்போ நினைச்சிக்கூட பார்க்க முடியாது சார்..,” என்றார் கவுந்தி கண்களில் கண்ணீருடன்.

No comments:

Post a Comment