Wednesday, November 25, 2009

கசக்கும் கரும்பு

மத்திய அரசு அறிவித்துள்ள கரும்புக்கான நியாய சன்மான விலை தொடர்பான அவசரச் சட்டம் இப்போதே பல எதிர்க்கட்சிகளிடம் கனன்று கொண்டிருக்கிறது. இந்தப் பிரச்னை நடக்கவிருக்கும் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் பெரும் விவாதத்துக்கான விஷயமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் அறிவிக்கப்பட்ட இந்த அவசரச் சட்டத்துக்கு இந்தியா முழுவதிலும் உள்ள விவசாய அமைப்புகள் அனைத்துமே எதிர்ப்புத் தெரிவித்துவிட்டன. இதைக் கரும்புச் சட்டம் என்று கூறுவதைவிடக் கருப்புச் சட்டம் என்று அழைப்பதுதான் சரியாக இருக்கும். இச்சட்டத்தில் பல விஷயங்கள் தெளிவுபடுத்தப்படாமல் இருக்கிறது. கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் இதுதொடர்பாக ஏதாவது அறிக்கையோ அல்லது இந்த அவசரச் சட்டத்தில் ஏதேனும் திருத்தமோ வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் சட்டை செய்வதாகவே தெரியவில்லை.

மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவாருக்கு எப்போதுமே சர்க்கரை ஆலைகளிடம் நெருக்கம் அதிகம் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இப்போது அறிவித்துள்ள கரும்புக்கான நியாய சன்மான விலை என்பது, முழுக்கமுழுக்க விவசாயிகளுக்கு எதிரானதாகவே அமைந்திருக்கிறது என்பது மட்டுமல்ல, மாநில அரசின் உரிமையையும் கேள்விக்குறியாக்கியுள்ளது என்பதுதான் அதைவிட அதிர்ச்சி அளிக்கும் விஷயம்.

கரும்புக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு நிர்ணயிப்பதும், ஒவ்வொரு மாநிலமும் தங்கள் பகுதியில் உள்ள சர்க்கரை ஆலைகளுடன் கலந்துபேசி, மாநில ஆதரவு விலையை நிர்ணயிப்பதுமான வழக்கத்தை இந்த அவசரச் சட்டம் மாற்றியுள்ளது. இதன் மூலம், மாநில அரசு தனது விவசாயிகளுக்கு அளித்து வந்த சிறிய நன்மையைக் கூட இல்லாமல் செய்துவிட்டது. மத்திய அரசு அறிவித்து வந்த குறைந்தபட்ச விலை ரூ.1070.60 ஐ, தற்போது நியாய சன்மான விலை ரூ.1298.40 என மத்திய அரசு அறிவித்திருப்பது எந்த அடிப்படையில் என்பது பெரும் விவாதத்துக்குரிய விஷயம். உற்பத்திச் செலவும் அச்செலவில் 50 சதவீதத்தைச் சேர்த்தும் கரும்புக்கு விலை நிர்ணயிக்க வேண்டும் என்பதே தேசிய அளவில் கரும்பு விவசாயிகள் சங்கங்களின் கோரிக்கை. இதன்படி குறைந்தபட்சம் கரும்புக்கு ரூ.2500 நிர்ணயிக்கலாம். ஆனால் மத்திய அரசு நிர்ணயித்திருக்கும் ரூ.1298 எப்படி நிர்ணயிக்கப்பட்டது?

மேலும் இந்த விலை நிர்ணயத்தை விவசாயப் பிரதிநிதிகளைக் கலந்து ஆலோசிக்காமல் அரசே தீர்மானித்தது ஏன்? பிழிதிறன் அளவை 1 சதவீதம் கூட்டியிருப்பது (8.5 சதவீதத்திலிருந்து 9.5 சதவீதமாக) எப்படி, எதனால்?

மாநில அரசுகள் தங்கள் விவசாயிகளுக்கான ஆதரவு விலையை அறிவித்தால், அச்செலவை அந்த மாநில அரசே ஏற்கவேண்டும் என்றும், அதனை விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கலாம் என்றும் மத்திய அரசு அறிவித்திருப்பது கரும்பு விவசாயிகளின் நடைமுறையைப் புரிந்துகொண்டு அறிவிக்கப்பட்ட அறிவிப்பாக இல்லை.

இதன் காரணமாக, சர்க்கரை ஆலைகள் அனைத்தும் இந்த நியாய சன்மான விலை ரூ. 1298-க்கு மேல் ஒரு பைசா கூட அதிகம் தரப்போவதில்லை. கரும்பு ஆலைகள் சம்மதிக்காது. மேலும், ஆலைக்குத் தரப்படும் கரும்பிலிருந்து கிடைக்கும் துணைப் பொருள்களான கரும்புச்சக்கை, எரிசாராயம் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் லாபத்தில் விவசாயிகளுக்குப் பங்கு உண்டு என்ற விதிமுறையை இந்த அவசரச் சட்டம் ஒன்றுமில்லாததாக்கிவிட்டது. ஏனென்றால், நியாயவிலைக் கடைகளுக்கான சர்க்கரையை வாங்கும்போது மத்திய அரசு அறிவித்துள்ள நியாய சன்மான விலையின் அடிப்படையிலேயே அமையும் என்கிற அறிவிப்பும் இந்த அவசரச் சட்டத்தில் உள்ளது. ஆகவே துணைப் பொருள்கள் மூலம் கிடைக்கும் லாபத்தை சர்க்கரை ஆலைகள் தங்கள் உற்பத்திச் செலவில் கழிக்க மாட்டார்கள்.

தமிழக அரசு ஏன் இந்தச் சட்டத்தை எதிர்க்கவில்லை என்று அஇஅதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா கேள்வி எழுப்பினால், தமிழக வேளாண் அமைச்சர் தனது பதிலாக இந்தச் சட்டத்தை தமிழக அரசு ஏற்கவில்லை என்று மட்டும் பதில் கூறியிருக்கிறார். அப்படியானால், நாடாளுமன்றத்தில் இந்த அவசரச் சட்டம் நிறைவேற வாக்கெடுப்பு நடக்கும்போது, திமுக எதிர்த்து வாக்களிக்குமா? கூட்டணியில் அங்கம் வகிப்பதால் இந்தப் பிரச்னையால் ஏற்படும் கெட்டபெயர் திமுகவுக்கும் வந்து சேரும் என்பதை உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளைத் தமிழகம் முன்னெடுத்துச் செல்வதில் என்ன தடை?

மாநிலங்களுக்கு அதிக அதிகாரம், அதிகாரப் பகிர்ந்தளிப்பு, மாநில சுயாட்சி என்றெல்லாம் பரவலாகப் பேசப்படும்போது, மாநில அரசுகளைக் கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக ஓர் அவசரச் சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறது. இதை மத்திய அமைச்சரவையில் பங்கு வகிக்கும் நம்மவர்கள் மௌனமாக ஆதரித்திருக்கிறார்கள். சுயாட்சி சுயநல ஆட்சியாகிவிட்ட பரிணாம வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது... சபாஷ்!

பட்டினத்தார் கையில் இருந்த அதே கரும்புதான். என்றாலும் இது ஒரு தினுசு. மேல்புறத்தில் இனிப்பு, கீழ்ப்புறத்தில் கசப்பு

No comments:

Post a Comment